புக்ககம் போகிறேன் பூங்குயிலே - மணியன்

புக்ககம் போகிறேன் பூங்குயிலே
உன் போலே
புதிதாய் ஒரு உறவ
புகுந்த வீடு காத்திருக்கு. . . . .

* * * * * * *

தலை தேய்த்து குளித்த உடன்
முடியாதே தலையை எனும்
தாயின் குரல் எனக்கு
எப்போதும் கேட்காதே. . . . .

* * * * * * *

ஒரு கையால் என் பின்னல் இட்டு
மறு கையால் வாய்ச் சோறு ஊட்டி
அசங்காதே என அதட்டும்
அன்னை கை கூட வருமா. . .

* * * * * * *

என்னம்மா நீ இப்படி
ஏதோ போல் உள்ளாய்
சொல்லம்மா என்ன வேண்டும் என
அள்ளித் தந்த தந்தை சொல்லும்
எப்போதும் கேட்காதே. . .

* * * * * * *

எடுக்காதே என் சோப்பு
எத்தனைமுறை சொல்வது என
என் அண்ணன் கூறுவது
எப்போதும் கேட்காதே. . .

* * * * * * *

காலை எட்டு மணி எழுந்து வந்து
காபி என்று சமையல் அறை
கால் நடக்கும் பாதை இனி
கானலாகிப் போய் விடுமோ. . .

* * * * * * *

கொல்லை வாசல் மரக்கிளையே
கோலமிட்ட சிறு திண்ணையே
தாளம் போட்ட அன்னத் தட்டே
மேளம் கொட்ட நீவீர் மறைவீரோ. . .

* * * * * * *

அதிகாலைச் சூரியனே
அந்திவானச் சந்திரனே
அத்தனையும் நினைவூட்ட
ஆதலினால் கூட வாரீர். . . .
ஆதரவும் தான் தாரீர். . . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (8-Feb-14, 7:30 pm)
பார்வை : 121

மேலே