விஷச் செடிகள் வளரும் ஊர்

வீட்டை கூட்டிவந்து
விட்ட இடத்தில் குவிகிறது குப்பை

சுவர்களுக்குள் சேமித்து வைத்ததை
கழிக்கத் தெரியாமல்
பெருக்கி வீசுகிரார்கள் வெளியே
அக்கணமே தெரு நாறுகிறது

புதிது புதிதாய் அழகென
கொடியில் காயவிட்ட வண்ணங்களை
உலர்த்தி அசைகிற காற்றும்
அநாகரீக மலங்களை சமீபித்தவாறு
துர்வாடையில் மிதக்கின்றது

நாகரீகத்தின் பெயரால்
அவர்களின் உலகத்தை அவர்களே
ஆளுவது போலான பாசாங்கில்
நரகத்தை இழுத்து வந்து
வாசலில் வைக்கிறார்கள்


புன்னகை வசீகரங்களால் பூமி கிளறி
விண்தொடும் அளவு கனவை
விதைத்து விட்டவர்களும் இவர்கள்தான்

இவர்கள்தான் பூக்கும் செடிகளை
வாசலெங்கும் நறுமுகை கமழ நட்டவர்கள்
இவர்கள்தான் சில காலங்களுக்கு முன்
இதங்களை காற்றில்
இறைத்து விட்டவர்கள்

இவர்கள்தான் இப்போது
முட்களை தேர்ந்து
விஷச் செடிகளை விதைக்கின்றனர்
யாருக்கும் தெரியாமல்
ஊர் சாகட்டும் என்று!

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (10-Feb-14, 12:34 am)
பார்வை : 145

மேலே