வள்ளுவனுடன் விஜயன்

விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை. எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்? யாருக்கு வேண்டும் இவனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும்.

இவனது கதைகளை, இவனாலேயே படிக்க முடியவில்லை. அவ்வளவு வள வள.! இவனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம்.

இதில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அவனது மனைவி “ஏங்க!ஏன் இப்படி இருக்கீங்க? உங்களை யாரு கதை எழுதலேன்னு அடிச்சாங்க? ஒண்ணு மோட்டு வளையை பாக்கிறீங்க. இல்லே தூங்கி போயிடறீங்க? உருப்படியாக வேறே ஏதாவது வேலையை பாருங்க”.

“வராது! வராது! கதை எனக்கெழுத வராது!” அலுத்துக்கொண்டான் விஜயன், தலையில் அடித்துக்கொண்டு திருவிளையாடல் தருமி மாதிரி. சீத்தலை சாத்தனார் போல் தலை வீங்கி விட்டது. ‘கடவுளே எனக்கு உதவி செய்ய மாட்டாயா’? கவலையில் அப்படியே நாற்காலியிலேயே தூங்கியும் போய்விட்டான்.

****

யாரோ விஜயனைத் தட்டி எழுப்பியது போலிருந்தது. விழித்தால் எதிரே ஒரு நீண்ட தாடியுடன், கையில் சுவடோடு. திருவள்ளுவர். “எழுந்திருப்பா! உனக்கு உதவி செய்யத்தான் இறைவன் என்னை அனுப்பினார்”

“ வாங்க! வாங்க ! கடவுள் வரவில்லையா?”

“தருமிக்குத்தான் அவர் போவார். உன்னைப் போன்ற கருமிக்கு நானே போதும்” வள்ளுவரின் ஹாஸ்யம் விஜயனுக்கு சிரிப்பு வரவில்லை. அவனுக்கு நகசுத்தி கூட வரும், ஆனால் நகைச்சுவை மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது.

“பரவாயில்லே! உங்களை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!” விஜயன்.

“பேசும்போது நன்றாகத்தான் பேசறே! எழுதும் போது மட்டும் கோட்டை விட்டுடறே!” நகைத்தார் ‘நட்பு’ எழுதிய நாயகன்.

உங்களைப்பார்த்தால் கொஞ்சம் சோர்வாகத்தேரிகிறதே! கொஞ்சம் மோர் குடியுங்கள்” உபசரித்தான் விஜயன்.

“அதை ஏன் கேட்கிறாய் அப்பா! குண்டும் குழியுமாக அண்ணா நகர் வரதுக்குள்ளே சே! என்னா நகர் என்று ஆகி விட்டது.” என்று அங்கலாய்த்தார். “எங்க சங்க கால மண் சாலையே தேவலை போலிருக்கு. நகரம் இல்லே இது! நரகம்! ”

ஆமோதித்தான் விஜயன். “ ஆம் வள்ளுவரே! நாங்க கொஞ்சம் கொஞ்சமாக கற்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் வீட்டில் மெழுகு வர்த்தி, கை விசிறிதான்- கரண்ட் என்பது காணாமலே போச்சு”

“சரி! சரி! அரசியலை விடு! விஷயத்துக்கு வருவோம்” என்று பேச்சை மாற்றினார் வள்ளுவன். ராஜதந்திரி அல்லவா!

“உன்னோட பிரச்னை என்ன ? கதை எழுத வரலே! கவிதை சுத்தமா வரேலே! அவ்வளவு தானே! நான் சொல்றபடி செய். நன்கு வரும்.” வள்ளுவர்

“என்ன பண்ணனும்?”- விஜயன்.

“முதல்லே நிறைய படிக்கணும்! ஐந்து வரி எழுத ஐயாயிரம் வரி படிக்கணும். அப்புறம் தான் எழுதவே ஆரம்பிக்கணும்”

“அய்யோடா! கல்லூரியிலேயே கஷ்டப்பட்டு படிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்தினேன். படிக்க கஷ்டப்பட்டு உத்தியோக உயர்வு வேண்டாமென்று சொல்லிவிட்டேன். என்னைப் போய்..” இழுத்தான் விஜயன்.

வெகுண்டார் வள்ளுவன். “படிக்காமல் கதை பண்ணினால், கவிதை சொல்ல நினைத்தால் காய்ந்து தான் போவீர்கள்.- சாடினார் ‘சான்றாண்மை’ சொன்ன பிரான்.

“சரி!. நிறைய படிக்கிறேன்! அப்புறம் எழுதறேன். மேலே சொல்லுங்கள்”

“இரண்டாவது: எழுதப் போற பிரச்சினை என்ன என்பதை முத்லில் தெரிந்து கொள். அந்த பிரச்னையை நன்றாக அலசு. மற்றவர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார். எதை,எப்படி,எப்போது சொல்லவேண்டுமோ அப்படியே சொல்லும் திறனை வளர்த்துக்கொள்.” அழகாக ஆரம்பித்தார் வள்ளுவன்.

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது விஜயனுக்கு. தனது தவறு தெரிந்தது.

“மூன்றாவது: சொல்லும் விஷயத்தை அழகாக, கூடிய வரையில் அந்த மொழியிலேயே சொல். சுருக்கமாக சொல். அவ்வையிடமிருந்து கற்றுக்கொள். இரண்டு வரியை இருபதாக்க இது என்ன மெகா சீரியலா?”

சிரித்தான் விஜயன். என்னை சொல்லிவிட்டு இவரே தங்கலிஷ்லே பேசறாரே.

வள்ளுவர் சொன்னார் “ சிரிக்காதே அப்பனே!. சில விஷயங்களை தமிழ்ப்படுத்தினால், படிப்பவர் பாடு பெரும் பாடு.”

“இல்லை! இல்லை! மேலே சொல்லுங்கள்”

வள்ளுவர் தொடர்ந்தார்.

“நான்காவது: நான் எழுதிய “பயனில சொல்லாமை” 20வது அதிகாரத்தில் வரும் குறட்களை கடைப்பிடி. “சொல்லுக சொல்லின் பயனுடைய : சொல்லற்க சொல்லின் பயனிலா சொல்” இந்த குறள் புரிந்ததா?”

“அப்புறம் எனது 65வது அதிகாரம் “சொல்வண்மை” படித்து நிற்க அதற்கு தக. கட்டாயம் எல்லாக் குறளும் படி.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ, அப்போதெல்லாம், நல்ல சிறந்த கதைகளை, கவிதைகளைப் படி. குப்பைகளை வெட்டி எறி. அதுவே நீ உருப்பட வழி”

“அப்படியே ஆகட்டும் ஐயா!”- வேறு என்ன சொல்ல.

"சொல்ல மறந்துவிட்டேன். இயற்கையை ரசிக்க கற்றுக்கொள். உனது அனுபவம் உனக்கு கை கொடுக்கும். உளறிக் கொட்டுவதை தவிர். மக்களை அவர்களது கலாச்சாரத்தை புரிந்து கதை சொல்"

'!' - வாயைப் பிளந்தான் விஜயன். இவ்வளவு இருக்கா?

“வாயை மூடு. இங்கு கொசு அதிகம் . உள்ளே போய்விடும். நான் வருகிறேன்!” எழுந்தார் குறள் கொடுத்த கோமகன்.

****

நச்சென்று தலையில் ஒரு அடி. விழித்தால் மனைவி. கையில் தோசைக் கரண்டியுடன். “கடைத்தெருவுக்கு போய் காய் வாங்கிட்டு வாங்கன்னு கரடியாய் கத்தறேன்! கனவு கண்டுகிட்டா இருக்கீங்க!. முதல்லே கெளம்புங்க!”

எழுந்து விட்டான் விஜயன். . முதலில் மற்றவர் எழுதியதை, நல்ல விஷயங்களை படிக்க முடிவு செய்து விட்டான். முக்கியமாக வள்ளுவன் தந்த குறளை. இனி கதை எழுதி கண்டவர் வாயில் விழுவதில்லை.

அவனது முடிவு நல்ல முடிவு என்றே தோன்றுகிறது,

குறைந்த பட்சம் வாசகர்களுக்கு ......ஒரு துன்பம் குறைந்தது..

முற்றும்...
*****
ஆ. கு. : நகைச்சுவை எனக்கு வருமா என பார்க்க எடுத்த சோதனை! ம்ம்ஹூம்.. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது.

எழுதியவர் : முரளி (10-Feb-14, 9:49 am)
பார்வை : 349

மேலே