துளிர் விடு
மனிதா....
மானுடம் வள...
மரணம் கொல்...
எந்தவொரு மிருகமும்
தன்னைத்தானே
அழித்துக்கொல்வதில்லை.....
வெட்டுண்ட
கிளைகள்கூட
துளிர்விட துடிக்கும்...
நீ மட்டும் ஏன்
வாழும்போதே
மரணிக்க விரும்புகிறாய்?
கடவுளல்ல நீ
மரித்தும் உயிர்த்தெழ!
சிகரெட்
உன் சவம் புதைக்க - இப்பொழுதே
சின்ன சின்ன பெட்டிக்குள்
சாம்பல் சேகரிக்கிறாய்!
தவணைமுறையில் - நீ
செத்துக்கொண்டிருப்பதை அறியாமல்
நாகரீகமென நையாண்டி பேசுகிறாய்!
டாஸ்மாக்
உன் மரணத்திற்கு
முன் அனுமதி சீட்டு
வழங்குமிடம்!
விஷத்தில் தேன் ஊற்றி
அமுதென்கிறாய்!
உயிர்கொல்லி
எனத்தெரிந்து
பூச்சுமருந்து குடிப்பாயா?
விஞ்ஞானம் கோள்களில்
வாழ யோசிக்கிறது
உன்கவனம் கோட்டரில்
வீழ நேசிக்கறது!
பாதை அறியாதளவு போதை
இருந்தும் - வாகனப் பயணம்
எதிரே வருபவர் யார்?
ஏதோ ஓர் உயிர்!
உன் தாயாய் இருக்கலாம்
உன் மகளாய் இருக்கலாம் - உனக்கென்ன
நிதானத்தில் இருந்தால்தானே நிறுத்த!
இரட்டை கொலைகாரன் நீ!
ஆம்! உன்னை நீ மாய்ப்பதும் கொலைதான்!
இறுதியாய் ஓர் எச்சரிக்கை!
உன் இறுதிச்சடங்கில்
உன் மேல்
விழுந்து அழ
ஒரு பாகத்தையாவது
மிச்சம் வை!