தலைப்பு தொலைத்த கவிதை
நீ தந்துசென்ற
பிரிவென்னும் ரணங்கள்
நீண்ட நினைவுகள் என்னும்
ஈக்கள் மொய்த்து மேலும் ரணமாகின.
இமைமூடியும்
மூடாப் பொழுதும்
என்னையே கொல்கிறாய்.
களிப்புற்று இருந்த காதலர் தினம்-என்
சாவு தினமாய் மாறுவதை
நட்பே நீ காண்பாய் .
விசாரித்து சொல்ல
வார்த்தையின்றி ஊசலாடும் என்னுயிர்
தவித்து தடுமாறுகிறது .
அகம் செத்து புறம் வெந்ததில்
அகத்திணையும் இல்லாமல்
புறத்திணையும் இல்லாமல்
வெறுந்திணை ஆகிவிட்டேன்
வெறும்திண்ணை ஆகிவிட்டேன் .
சாதிக்க பிறந்த என்னை
சோதிக்க வைத்து
நீ மட்டும் நைல் நதியில்
உல்லாச படகு விடுகிறாய்
புது நட்பில் துடுப்புகள்
பரவசத்தோடு நீரைக் கிழிக்கின்றன.
இந்த நட்பும் இறுதிவரையா
இல்லை என்னைப் போலவா .
அன்பை கொச்சைப் படுத்தி
ஆனந்தம் கண்ட நட்பே
அன்புக்காய் ஏங்குவாய் ஒருநாள்
அப்போது நானிருக்க மாட்டேன்
நானிருப்பேன் வெகு தூரத்துக்கப்பால் .
அப்போது-
நீ விடும் சொட்டு கண்ணீரில்
காலம் காலம் வாழும்
காதல் தெரியும்.