தானாசுரன்

சாகா வரம் வேண்டி சிவனை குறித்து கடுந்தவமியற்றினான் தானாசுரன் எனும் அரக்கன் :
அவன் முன் பிரத்யட்சமானார் சிவபெருமான் !
'' எந்தவொரு ஜீவாத்மாவும் , மரணத்தை தவிர்க்கவே முடியாது !...எனவே வேறு வரம் கேள் !''
என்றார்சிவபெருமான் ! உடனே தானாசுரன் ,
'' இறைவா....எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில் , 1000 குண்டலங்களுடன், உயிர்க்கவசம் ஒன்றும்
தரவேண்டும் !...இவை எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக்கூடாது !''
என்று கேட்டான் :
பெருமானும் அவ்வரத்தை அளித்து விட்டு மறைந்தார் !
பிறகென்ன .....ஆணவத்தாலும் , அகங்காரத்தாலும் அவன் பல அட்டூழியங்கள் புரிய துவங்க .....
கொடுமை தாங்க முடியாத இந்திரன் முதலானோர் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர் ! .....
மறுகணம் அவரின் திருக்கரத்தினின்று சீறி புறப்பட்ட சக்ராயுதம் ...அவனை விடாமல் துரத்தி ....அவனின் குண்டலங்களை ஒவ்வொன்றாக அறுத்தெறிந்தது !
அவனிடம் மிஞ்சியது ஒரே ஒரு குண்டலமும் , உயிர்க்கவசமும் மட்டுமே ! இறுதியில் ,
'' பகவானே ...காப்பாற்றுங்கள் !''
என்று சிவபெருமானை சரணடைந்தான் அவன் : ஆனால் பெருமானோ ,
'' தானாசுரா ...உன்னை துரத்தி வரும் சுதர்சனம் ஒரு காலச்சக்கரம் !..காலத்தின் அதிபதி கதிரவன் !...அவனை வேண்டினால் பலன் உண்டு !''
மகேஸ்வரனின் வார்த்தையை ஏற்று சூரியனிடம் தஞ்சம் புகுந்த அவன் ,
'' ஐயனே ...என்னை காப்பாற்றுவதாக வாக்களித்த பின்னரே முழு விவரங்களையும் கூறுவேன் ! ''
என்று கூற ...
சூரிய பகவானும் அவனை காப்பதாக வாக்களித்தார் !
பின் அவன் அனைத்தையும் அவரிடம் எடுத்துரைக்க ....
சூரிய பகவான் திடுக்கிட்டார் ! அவசரப்பட்டு அசுரன் ஒருவனுக்கு வாக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்தினார் !
எனினும் , வேறு வழியின்றி அவனுக்கு வாக்கு கொடுத்து விட்ட பாவத்திற்காக அவனை ஒரு சிறு கோதுமையளவுக்கு மாற்றி விழுங்கி விட்டார் சூரியபகவான் !
அடுத்தகணம் அவர் முன் வந்து நின்றது சக்ராயுதம் !
அறியாமல் அசுரனுக்கு அபயம் அளித்து விட்டதற்கு வருந்திய சூரிய பகவானிடம் சக்கரத்தாழ்வார் ,
'' சூரியதேவா ....உன்னையும் , உன்னுள் அடைக்கலம் புகுந்த அசுரனையும் இப்போதே என்னால் அழிக்க முடியும் !.....ஆனால் உன்ன அழித்து விட்டால் உலகம் இருளில் மூழ்கிவிடுமே என்று யோசிக்கிறேன் !''
என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அங்கு பிரசன்னமானார் மகாவிஷ்ணு !
'' சூரியதேவா .....அசுரனுக்கு நீ அளித்த வாக்கை நிறைவேற்ற அவனை அழிக்காமல் விட்டு விடுகிறேன் !..
துவாபரயுகத்தில் , போஜராஜனின் வளர்ப்பு மகளான குந்திதேவி , உன்னை பிரார்த்திப்பாள் ! அப்போது , உன் வயிற்றில் உயிரணுவாய் மாறியிருக்கும் தானாசுரனை , அவளுக்கு அளித்து விடு ! பாரபட்சமின்றி , உலகுக்கு ஒளி தரும் உனது நற்குணம் அவனிடம் உண்டாகட்டும் ! ''
என்று அருளி மறைந்தார் மகாவிஷ்ணு !
அந்த குழந்தையே , பிற்காலத்தில் ...' இல்லை ' என்று சொல்லாத வள்ளல் கர்ணன் !

எழுதியவர் : முரளிதரன் (12-Feb-14, 10:35 am)
பார்வை : 237

மேலே