மனிதவாழ்வின் சிறப்பு

மனிதராய்ப் பிறந்ததற்காய்
மனம் வருந்துவோரே!
பிறந்த குலம் ஊர் பேர் குறித்து
பெறிதும் புலம்புவோரே!

செடிகொடி மரமாய்
சிற்றறிவுப் பிறப்பெய்தி
பிறந்தவிடத்திலேயே ஆயுள்
இருக்குங்காலம்வரை

காய்கனி நிழல் தந்து
விருத்தியில் மட்டும்
விழைவோடிருந்து
காலத்தே அழிவதும்

ஊர்வனவாய் பறப்பனவாய்
விலங்கு வகையினராய்
ஏதொவொரு பிறப்பெடுத்து
இரைதேட இனம்பெருக்க

இருக்குமிடம் காக்கவென்று
இருப்பிலுள்ள வாழ்வுதனை
உள்ளுணர்வின் உந்துதலில்
தள்ளிவிடுதல் மட்டும்

உவப்பாயிருக்குமென்று
உண்மையில் எண்ணுவீரோ?

மனிதப்பிறப்பின் மகத்துவம்
தானறிய – இனி
ஒருபோதும் பிறந்ததற்காய்
வருத்தங்கொள்ள மாட்டீர்.

பெற்றோரைத் தவிர
மற்றெல்லாம் மாற்றிடலாம்.
சிறந்ததுவெல்லாம்
சீராக அடைந்திடலாம்.

சரி எது தவரெதென்று
சீராகச் சிந்தித்து - வாழ்விற்குத்
தேவையெதுவென்று
திறமாய் தெரிந்திடில்

அடையவேண்டியதை
திடமாய் குறிவைத்து
அறிவின் துணைகொண்டு
அயராமலுழைத்து

சில்லறைவழிகளில் – மனம்
சிக்குண்டு சீர்கெடாமல்
குறுக்குவழியெதிலும்
சுருக்கவே சென்றிடாமல்

அளவான வேகத்தில்
நாளும் பயணித்தால்
அடையலாம் தேடியதை – நன்றாய்
அனுபவிப்பீர் அடைந்ததை.

இடையே எதுவரினும்
இம்மியும் கலங்காதீர்.
தடைகளேதும் கண்டு
தயங்கிச் சோராதீர்.

துணிவு கொள்வீர் - தேவையெனில்
பிறர் தயவு கொள்வீர்.
போகும்பாதை சரியெனில் – இலக்கை
போயடைவீர் இது திண்ணம்.

வாழுங்காலமே வரமாய்
நல்லறிவும் நல்லுழைப்பும்
நற்பண்புகளும் நற்செய்கைகளும்
உம் சொத்தாய்

எண்ணமும் வாக்கும்
பண்ணும் காரியமும்
உண்மையாய் – பிறருக்கு
உவப்பாயிருக்கட்டும்.

இலக்கில் திடமும்
பயணத்தில் துணிவும்
முயற்சியில் மும்முரமும் - சிறிதும்
அயற்சியில்லா மனமும்

தெளிவான சிந்தையும்
திறமான புத்தியும்
தோல்வியில் வீழிடில்
துவளாமல் எழுச்சியும்

வெற்றியில் பணிவும்
பெற்றதில் திருப்தியும்
பகிர்தலில் மகிழ்வும்
நிறைவும் அமைதியும்

பிற உயிரிடம் அன்பு
செலுத்துவதில் இன்பம்
பெறுவீராகில் - எப்போதும்
சிறந்திடுமே உம் வாழ்வு.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (12-Feb-14, 5:02 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 182

மேலே