காதல் பரிசு
காதல் பரிசு தர எண்ணி நானும்
காதல் போர் புரிந்தேன் ; தோற்றேன் ;
காதல் போரில் விழிகளின் கணைகளை
எதிர்த்து வென்றவர் யார் என
எவரும் உரைத்திடல் முடியாது என்பேன் ;
புருவமெனும் வில்லில் பார்வை எனும்
கணைத் தொடுத்தவர் ; பருவம் எனும்
களத்தில் போர் தொடுத்து வெற்றி
பெற்றால் தோற்றதாய் அர்த்தம் ;
தோற்று விட்டாலோ வென்றதாய் அர்த்தம் ;
வேடனின் கணைகள் இரை கொடுக்கும் ;
வீரனின் கணைகள் புகழ் கொடுக்கும் ;
சில வீணரின் கணைகள் உயிரெடுக்கும் ;
விரோதக் கணைகள் நட்பைக் கெடுக்கும் ;
குரோதக் கணைகள் வாழ்வைக் கெடுக்கும் ;
காதலர் சின்னம் கரும்புவில் ஆகும் ;
மனதில் வழிபடும் தெய்வமோ மன்மதன்
இதில் எந்தக் கணையைப் பரிசாக அளிப்பது
என்றே என் மனம் குழம்பியது ;
காதல் பரிசாக அன்னத்தை அனுப்பி
அவள் உள்ளம் மகிழ்வதை பார்த்திட
மனமும் எண்ணியே ஏங்கியது ;
என்னவளே ! அன்ன நடையாள் அன்றோ !
காதல் பரிசாய் புறாவை அனுப்பிட
எண்ணியது என் மனம் ;சமாதானம்
பேசிட அவள் இருக்கும் பொழுது
புறாவை புறக்கணித்தேன் காதல் பரிசாக்க
என் கவிதை வரிகளை பரிசாக தரலாம்
என்று நினைத்து எழுத்துக்களை
மாலையாய் கோர்த்து கொண்டு இருந்தேன் ;
என் காதல் வரிகளை வெறும் வார்த்தை
ஜாலங்கள் என்று எண்ணி விட்டால்
என் செய்வேன் நானும் ; சொல்லடி கண்ணே !
ரோஜாவை பரிசாக தரலாம் என்றால்
அதன் காம்பில் உள்ள முள் குத்தி விட்டால்
என்ற ஐயம் என்னுள் எழுந்தது ;
நிலவை பரிசாக தரலாம் என்றால்
என்னவளின் முகத்திற்கு நிலவு பரிசோ !
நிலவே நீ தேய்வாய்! மறைவாய் !
என் காதல் பரிசு நிலவல்லவே! தேய்ந்து போக ..
என் காதல் பரிசாக எதை கொடுப்பேன்
என் உயிரைத் தவிர ....இறுதியில் என்
இதயத்தை பரிசாக தரலாம் என்றால்
அது என்னிடம் இல்லையே !அவளிடம்
தானே உள்ளது ;இதயத்தை இடம் மாற்றி
இம்சை ஏனடி செய்கிறாய் ? என்னுயிரே !
சிந்தை சிதறி இதயம் துடிக்க வைக்கிறாய் ;
கண்ணே ! மணியே ! என் உயிர் காதலியே !
நம் நினைவுகளை நிஜமாக்கி உனக்கு
காதல் பரிசாகத் தருகிறேன் அன்பே !!!