இதய வாசலில்

ஆதவக் கீற்று வரமுடியா அறைக்குள்
அடைபட்டுக்கிடக்கிறேன்
பேச ஒருவரின்றி
பெருமூச்சை விட்டபடி
பேசாமல் கிடக்கின்றேன்
யாருக்கும் தெரியாதபடி அழுது
நானே எனக்குள்ளே சிரித்து
பொய் வாழ்வுக்கான
ஒத்திகை நடக்கிறது நாளாந்தம்
எத்தனை நாளைக்கென்றுதான்
நீ தந்த கடிதங்களை படிப்பது?
எத்தனை முறைதான்
உன் காதல்திருமுகத்தை
புகைப்படத்தில் பார்ப்பது?
நீ அனுப்பிய தகவல்களை சேமித்தே
அலுத்துப் போய்க்கிடக்கிறது அலைபேசி
மாதவப்பேறே! - என்
மாணிக்கத்திரளே!
உன்மீது மையல் கொண்ட காதல்
மாறவேயில்லையடி இன்னும்.
வருடங்கள் பல
உருண்டோடினாலும்
பருவங்கள் மாறி
இளமை செத்தாலும்
மெல்ல மெல்ல வந்தென்
மனதில் குடியேறியவளே!
உன் காதலையும்,உன்னையும்
கலைக்கவே முடியாது
நீயொன்றும் அத்துமீறி நுழைந்த
சிங்கள குடியேற்றவாசியல்ல
என் அங்கமெல்லாம் நிறைந்துள்ள
ஆறு லீற்றர் இரத்தமடி .
தாலியெடுத்து உன் கழுத்தில் கட்டவும்
தாரமென உன்னையென் அருகில் சேர்க்கவும்
காலமொன்று கனிந்து வருமோ?
காலம் வருவதற்குள்
காலன் என்னை கூப்பிட்டு தொலைப்பானோ?
யாரறிவார்?
எது வரினும் வரட்டும்
எனினும்
நீயேயிருப்பாய் என்
இதய வாசலில் இளவரசியாய்.

எழுதியவர் : மு.யாழவன் (14-Feb-14, 9:29 am)
சேர்த்தது : yazhavan
Tanglish : ithaya vasalil
பார்வை : 113

மேலே