எங்கே எங்கள் அஞ்சல் அட்டை-
எங்கே எங்கள் அஞ்சல் அட்டை.??.
==============================
கொஞ்சலாய் வரும் அஞ்சல்
சிணுங்கலாய் வரும் அஞ்சல்
கூப்பாடாய் சில அஞ்சல்
பாடி அழைக்கும் சில அஞ்சல்
பெயரினை சொல்லி அழைக்கும் சில அஞ்சல்
துள்ளி குதிக்கும் சில அஞ்சல்
அழைப்பதுவும் பல விதத்தில்
அவரவர் விருப்பம்போல்!!!
கண் சிமிட்டும் நேரத்தில்
கையடக்க தபால் பெட்டியில்
அலைபேசி தபால்காரர்
கணக்கில்லாமல் தரும் அஞ்சல்!!!
அஞ்சல் அட்டை
பாட்டிசைக்குமா??
இனிய மொழியில்தான்
செய்திகளை உடன் தருமா??
அஞ்சல் அட்டை
குரல் தருமா??
"இச்" என்ற முத்தத்தை
சத்தத்தில் தந்திடுமா??
செய்திகளை அஞ்சல் அட்டை
மஞ்சத்தில் அளித்திடுமா
கொடுக்கும் பதில்களை எல்லாம்
கொஞ்சத்தில் சேர்த்திடுமா??
வேண்டிய.போதெல்லாம்
சென்று கொடுக்கும் அஞ்சல்
தகவல் கொடுத்தேதான்
தகவல் வாங்கும் அஞ்சல்
உடனுக்குடன் பட்டுவாடா
செய்திடுமா அட்டை அஞ்சல்??
செய்கிறது அலைபேசி அஞ்சல்!!!
அலைபேசி அஞ்சல் ஒருபுறமாய்
மின் அஞ்சல் கணினி ஒருபுறமாய்
தகவல் பரிமாற்றங்களோ
நவீன அஞ்சல் உத்திகளில்!!!
இல்லந்தோறும் நாடெங்கும்
உலகெங்கும் கரங்கள் எல்லாம்
அலைபேசி கணினி பெயரில்
அழகழகு தபால் காரர்கள்
ஆக்கிரமிப்பினால் அன்றோ
காணாமல் போனது அஞ்சல் அட்டை!!!
எங்கே எங்கள் அஞ்சல் அட்டை??
என்றே கேள்வி கேட்டல் தவறு
காணாமல் போனதென்று
கண்டபடி சொல்வதும் தவறு
தொலைத்துவிட்டோம் என்பது உண்மை
உண்மை இதை மறுப்பதற்கில்லை!!!
அலைபேசி அஞ்சலிலே
செய்தியெல்லாம் குறுகியது போல்
மனங்களும்தான் சுருங்கியது
நெடுவரி அஞ்சலை எல்லாம்
அலைபேசி விழுங்கியது!!!
அன்பான மடலைஎல்லாம்
காலம் கடந்தும் காண்பதற்கு
கண்டு கண்டு மகிழ்வதற்கு
அஞ்சல் அட்டை போல் வருமா??
நெஞ்சினிலே கவலை வந்து
அஞ்சல் அட்டையை தேடுகிறேன்...