ஓர் எழுத்தாளனின் கதை-5
காவ்யா- தினகரன் நட்பு தொடர்கிறது. அந்த உறவு --நட்பு எல்லைக்குள் காதல் விளம்பினை தொட முயற்சிக்கும் --ஓர் இனம்புரியா உணர்வில் தத்தளிக்கிறது எனலாம்.
தினகரனின் கல்லூரி படிப்பின் முதலாமாண்டில் அவன் காவியாவின் வற்புறுத்தலுக்காகவே பல கவிதைகள் எழுதினான். அதை அவனின் தமிழ்பேராசிரியரிடம் காவியா தான் காண்பித்து கருத்து கேட்பாள்.
இப்படியாக தினகரன் கல்லூரி வாழ்வின் முதல் ஆண்டின் இறுதி நாட்கள் வரை உருண்டு வந்துவிட்டன.
தமிழ் ஆர்வலன் தினகரன் என்றாலும் அவனுக்கு தமிழில் தெளிவான புலமை இல்லை. ஏதோ ரசிப்புத்தன்மையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான் . அது அவனுக்கான அடையாளமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது. தமிழ் பேராசிரியர் அவனுக்குள் இருக்கும் எழுத்து திறனை வெளிக்கொணர வைத்தாலும் அவனை தமிழ் மொழியில் புலமை பெற வைக்க முயலவில்லை. அது தேவையாகவும் அவர் ஏனோ கருதிடவில்லை. அந்த அளவிற்கு அவனின் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கும், படிப்பவர்களை கவர்ந்திடும் அளவில் அவன் கவிதையில் ஒரு மாயை இருக்கும் . அது அவனின் இயல்பு திறனே தவிர தமிழ் ஆற்றல் அல்ல.
இத்தகைய முரண்பாடான , மாயை பிம்பமாய் தெரியும் அவனின் எழுத்து திறன் எப்படி அவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும் ?
தினகரனை உச்சத்திற்கு கொண்டு செல்ல காவியாவின் முயற்சிகள் ஓரளவுக்கு உதவி செய்தன. காவியாவும் தமிழ் புலமை அற்றவள் தான். ஆனால் தனக்கு தெரிந்த தவறுகளை அவள் பாணியில் சொல்லி பொய்யாக கோபித்துக்கொள்வாள்.
அவள் பொய் கோபத்தில் அசைந்தாடும் அந்த விழிகளில் மயங்கியோ அல்லது விழந்தோ எப்படியோ கவிதைகளை நன்றாக எழுதி விடுவான்.
காவியாவிற்கு தெரியாமல் தினகரன் எழுதிய கவிதைகளை கணக்கிட்டால் ஒரு புத்தகமே வெளியிடலாம்.
உந்தன் விழிகள்.
வெள்ளை நீரோடையில்
கருப்பு ஓடம்.
விழி கரைகளாம்
இமைகளில் அழகிய
மை கோலம்.
இவ்வாறான குட்டி குட்டி கவிதைகள் எப்போதும் யாராலும் ரசிக்கப்படவில்லை. இவைகள் அவனுக்கே அவனுக்காக அவளைப்பற்றி அவளுக்கு தெரியாமால் ரகசிய உடன்பாட்டில் எழுதப்பட்ட படைப்புக்கள். பின்னாளில் தினகரன் தன்னிலை மறந்தபோது அந்த கவிதைகள் ”காணவில்லை”என்ற நிலைக்கு சென்றுவிட்டது.
” தினா படிக்கவே மாட்டானா......? ” தமிழ் பேராசிரியர் தினகரனின் உற்ற தோழன் சசிக்குமாரிடம் கேட்கிறார் .
“ மேம் என்ன இப்படி கேட்கறீங்க.? எப்படித்தான் படிப்பான்னு தெரியல ..மேம். இதுவரைக்கும் அரியர்ஸ் வைக்கல, ஜஸ்ட் பாஸாவது ஆகிடுவான். ஆனா மேம்... எப்போ பார்த்தாலும் கையில இருக்கிற நோட்டுல என்னத்தயோ கிறுக்கிட்டு இருப்பான் மேம். அவன் ஒரு விசித்திர சைக்கோ “
“ஹே சசி..! சைக்கோன்னு சொல்லாதே.. அது அவனோடு பொழுப்போக்கு..! விடு.. அவன் வழியில் விடு... ! பட் அவனை கொஞ்சம் வாட்ச் பண்ணிட்டே இருங்க...! தனியா இருக்கவிட்டாலும் அடிக்கடி அவன் என்ன செய்றான்னு பாருங்க. சரியா ? “
“ஏன் மேம்... ஏன் இப்படி சொல்றீங்க.. அவன் என்ன தீவரவாதியா “ நக்கலாகவே சசி கேட்டான்.
“ இல்ல... அவன் ஒரு நோயாளி “ என்ற தமிழ் பேராசிரியர் மணிமேகலை தினகரனின் உற்ற நண்பன் சசிக்குமாரிடம் ஏதையோ தீவரமாக சொல்லிவிட்டு .. சொன்னதை காவியாவுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
இவ்வாறு தினகரனின் மர்மங்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக தெரிந்து இருந்தது.
யாராக இருந்தாலும் , உயிர் தோழனாக இருந்தாலும் எதுவும் ஒரு எல்லை வரை தானே மற்றவர்களை பற்றி கவலைப்படுவார்கள். அவரவர் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் இருக்க, அவ்வப்போது சுயநலத்திற்கு இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டிருக்கிறது.
---மனசாட்சி பேசினாலும் உதவிகள் ஊமையாகும் விசித்திர மானிடபிறவிகள் கொண்ட உலகம் தானே இது ??!!--
ஒரு சமயம் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொடுமையான நிகழ்வுகள் தினகரனின் மனதை ஆவேசப்படுத்தியது. அந்த தாக்கத்தில் அவன் எழுதிய கவிதைகள் பரவலாக கல்லூரி வளாகத்தில் பேசப்பட்டது.
அந்த கவிதை உணர்ச்சிமிக்க வரிகளில் மதங்களை தாக்கி கடுமையான வார்த்தைகள் புகுத்தப்பட்ட புரட்சி படைப்பு எனலாம். அந்த கவிதையே கல்லூரியிலுள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தினகரனின் பெயர் பிரபலமாகியது. ஆனால் அந்த கவிதையே அவனை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கவும் செய்தது.
அந்த கவிதையில் அவன் எழுதிய அந்த வரிகள் அன்றைய சூழ்நிலையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆக்ரோஷ உணர்வு தூண்டியது என்று கல்லூரி நிர்வாகம் காரணமும் சொன்னது.
அந்த நாட்கள் தினகரனுக்கு கடுமையான போராட்ட நாளாக அமைந்து அவனின் அமைதியை கெடுத்தது.
சில நாட்களுக்கு பிறகு....!
”இந்த கல்லூரியில பிரபலமாக பேசப்படும் அந்த மாணவன் அப்படி என்னதான் எழுதியிருந்தான்...?” தினகரனின் மானசீக குரு முத்துமாணிக்கம் ஒரு விழாவிற்காக அந்த கல்லூரி வந்தபோது கல்லூரி தாளாளரிடம் கேட்க... அந்த கவிதை அவருக்கு காண்பிக்கப்படுகிறது. சற்று புருவம் உயர்த்திய முத்துமாணிக்கம்..
“நான் அவன் குரலில் இந்த கவிதை கேட்க வேண்டும். அந்த மாணவனை மேடைக்கு அழைக்க முடியுமா ? “
மீண்டும் தினகரனுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படப்போகிறதோ ? அதுவும் அவனின் முன்மாதிரி, மானசீக குரு,, உயிராய் நேசிக்கும் ”கவி மகாராஜா” முத்துமாணிக்கத்தின் முன்பே அவன் அவமானப்பட போகிறனா ?
தினகரன் மேடைக்கு வரவழைக்கப்பட்டான். முத்துமாணிக்கத்தை மீண்டும் மிக அருகில் பார்த்த அந்த நொடியில் தினகரனின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்....?
....................... சந்தோஷ நிகழ்வுதானா அது ?
-------(தொடரும்)