கஸ்டமர் சேவை
இன்று நான் அலுவலகத்திற்கு லேட். நான்தான் அங்கு மேனேஜர். நேற்றும் அதற்கு முன் தினமும் 2 நாட்கள் அலுவலக வேலையாக வெளியூர் போகவேண்டிய சூழ்நிலை. நான் இல்லையென்றால் என்ன கூத்தடிக்கிறர்களோ என் ஆபீசில். முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது. சே! என்ன கொடுமை சார் இது ?
நேற்றுதான் நான் ஹைதராபாதிலிருந்து திரும்பி வந்தேன். அங்கு மேலாளர்களுக்காக ஒரு வார பணிப் பட்டறையில்,நேற்று “வாடிக்கையாளர் சேவை” பற்றிய தலைப்பில் எனது பேச்சு. அதற்காக சென்றிருந்தேன் .என் உரை முடிந்தவுடன் ஒரே கைதட்டல். “பேஷ்! பேஷ்! ரொம்பப் பிரமாதம்” என வந்திருந்த அதிகாரிகள் பாராட்டினார்கள். எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறதாமே!. கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
அலுவலகத்தில் நுழைந்தேன். சந்தைக் கூட்டத்தில் இருப்பது போல் இருந்தது. வாடிக்கையாளர்கள் அங்கும் இங்கும் அலை மோதிக் கொண்டிருந்தார்கள். “இப்போது முடியாது !, “நாளைக்கு வாருங்கள்”, “இந்த கவுண்டர் இல்லை”, “அந்த கவுண்டர் போங்கள்” என்று அலுவலகச் சிப்பந்திகள் வாடிக்கையாளர்களை விரட்டிக் கொண்டிருநதார்கள். மொத்தத்தில் ஊழியர் , வாடிக்கையாளர் இடையே பரஸ்பரம் குமுறல்கள், அங்கலாய்ப்புகள், கோபதாபங்கள், அங்கே நிறையவே வழிந்து கொன்டிருந்தது.
சில ஊழியர்கள் ஓரமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் . அவர்களாகவே எடுத்துக் கொண்ட தேநீர் ஒய்வு.
அக்கௌன்டன்ட் மேஜை அருகே வாடிக்கையாளர் கூட்டம், ஒரே சத்தம். எனக்கு கோபமாக வந்தது. என்ன அக்கௌன்டன்ட் இவர்? கொஞ்சம்கூட நிர்வாகத்திறனே இல்லையே! கண்ட்ரோல் பண்ணத் தெரியலியே!
இருக்கட்டும், நேரம் கிடைக்கும் போது இவருக்கு கொஞ்சம் நிர்வாகத்திறன் பற்றி கிளாஸ் எடுக்கலாம். நினைத்துக்கொண்டே எனது கேபினை அடைந்தேன்.
என் கேபின் வாசலில் சில வாடிக்கையாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில பேர் முகத்தில் எள்ளும் கொள்ளும்!. சிலர் சலிப்புடன் எனது அறையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் . புகார் கொடுக்கவோ அல்லது கையெழுத்துக்காகவோ? அவர்களை பார்த்து ஒரு புன்னகையுடன் எனது அறைக் கதவை திறந்து உள்ளே சென்றேன் . அறையின் ஏசி மெல்லிதாக சத்தத்தோடு இதமான காற்றையும் வீசிக் கொண்டிருந்தது.
“இந்த ஆபீசில் எல்லாத்துக்கும் நான் மட்டும்தானா! என் வேலையை செய்ய விட மாட்டேங்கிறாங்களே!” கொஞ்சம் கடுப்புடன் இருக்கையில் அமர்ந்தேன்.
எனது கம்ப்யூட்டரை கிளுக்கினேன். நிறைய வேலை இருக்கிறது. எனது அனுமதி கேட்டு நிறைய நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள், மனுக்கள் காத்துக்கொண்டிருந்தன.
அடேடே! ஹெட் ஆபிசிலிருந்து எனக்கு ஒரு பாராட்டு வந்திருக்கிறதே! ஒரு மாதத்திற்கு முன்பு நான் புவனேஸ்வரில் பங்கு கொண்ட “எப்படி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது” சொற்பொழிவு போல் இங்கும் நடத்த வேண்டுமாம். அடுத்த வாரம் டெல்லியிலும் பேச வேண்டுமாம். அடி சக்கை!
அறை வாசலில் ஆளரவம். யாரோ எட்டிப் பார்க்கிறார்கள் போலிருக்கே! கஸ்டமரோ? உடனே எனது கடை நிலை ஊழியனை பெல்லடித்து கூப்பிட்டேன்.
“ ரவி! உடனே வா. சூடா கொஞ்சம் டீ, அப்புறம் பிஸ்கட் கொண்டு வா. ஏதாவது போன் வந்தால், நான் முக்கியமான கஸ்டமருடன் இருப்பதாகச் சொல். சரியா!"
"சரி சார் !"
"அப்புறம் ரவி, அறைக் கதவை மூடு. வாசலில் நிக்கறாங்களே, அவங்களை அக்கௌன்டன்டைப் பார்க்கச் சொல். ஒரு வாடிக்கையாளரையும் உள்ளே விடாதே. எனக்கு நிறைய வேலை இருக்கிறது”
ரவி கதவை மூடிக் கொண்டு வெளியே சென்றான். அப்பாடா!. எனது செல் போனை மௌனமாக்கினேன். பிரிப் கேசைத் திறந்து முக்கியமான பேப்பர்களை வெளியே எடுத்தேன். ரயில் டிக்கெட்டுகள், டாக்ஸி பில்ஸ், ஹோட்டல் பில், எல்லாவற்றையும் தேடி ரக வாரியாகப் பிரித்தேன்.
அடடா! எவ்வளவு வேலை இருக்கிறது ? ஹைதராபாத்திற்கு சென்று வந்த செலவுப் பட்டியலை ஹெட் ஆபீசிற்கு அனுப்ப வேண்டும். அப்புறம் எனது பெட்ரோல் பில், கஸ்டமர் எக்ஸ்பென்செஸ் பில், மெடிக்கல் பில்,. இது மட்டுமா? டெல்லியில் நான் எடுக்க வேண்டிய “ வாடிக்கையாளர் மகிழ்ச்சியும் வணிக மேம்பாடும்” பற்றி நோட்ஸ் வேறு தயார் பண்ண வேண்டும். இதை முடிக்கவே இன்றைய பொழுது போதாது.
வெளியே ஒரே கூச்சல். அக்கௌன்டன்டே சமாளிக்கட்டும். சுத்த வேஸ்ட் அவர். என் கூட இருந்தும் எதையும் கத்துக்கலியே!
***
மதியம் சுமார் 2.30 மணியிருக்கும். உண்ட களைப்பு, உழைத்தது போதும். லேசாகக் கண்ணை அசத்தியது.
“சார், சார்”-ரவி எழுப்பினான். “ஹெட் ஆபீசிலிருந்து போன். ஆர் எம் சார் அவசரமாக பேசணுமாம்”
“வேற வேலையில்லை இவங்களுக்கு. இந்த ஸ்டேட்மெண்ட் கொடு, அந்த ரிப்போர்ட் ஏன் இன்னும் வரலைன்னு பிடுங்குவாங்க.” அலுத்துக்கொண்டே மேலதிகாரியுடன் பேச ஆரம்பித்தேன்.
"சார்! சொல்லுங்க சார் ! இன்னிக்கு தான் சார் ஹைதராபாத்லேருந்து வந்தேன் ! உங்களுக்கு போன் பண்ணனும்னு தான் சார் நினைச்சேன் ! எப்படி சார் இருக்கீங்க ? " பணிவுடன் கேட்டேன்
“என்ன நடக்கிறது உங்கள் ஆபீஸ்ல? என்னய்யா பண்றீங்க ? ” மிரட்டினார் என்னோட பாஸ் போனில்.
"சார் ! என்ன விஷயம் சார் ?" எனக்கு புரியவில்லை
"இது வரை நாலு கம்ப்ளைன்ட் உங்க பேரில். என் மேலதிகாரி என்னை காய்ச்சறான்! ஏன் உங்க கிளைகளிலே பிசினஸ் கொரைஞ்சிகினே போவுதுன்னு கிழிக்கிறான் ! உங்களை மாதிரி முட்டாள்களையும், சோம்பேறிகளையும் வெச்சு நான் வேறே என்ன பண்ண முடியும் ? "
"சார், நான் இப்போவே நேரே வரேன் சார் !" நான் பதில் சொல்லுமுன் போனை வைத்து விட்டார்.
“ரவி! அக்கௌண்டன்ட் எங்கே? கூப்பிடு” சத்தம் போட்டேன். யாரும் வரவில்லை. ரவியும் காணோம். எழுந்து அக்கௌன்டன்ட் மேஜைக்கு விரைந்தேன். அவரது டேபிளில் பேப்பர்கள், பைல்கள் பரப்பி இருந்தது.
அக்கௌன்டன்ட் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, டெலிபோன் காலில் யாரிடமோ வழிந்து கொண்டிருந்தார். கொஞ்சல் குரலில், நிச்சயமாக கஸ்டமர் இல்லை. டேபிளில் டீ, பகோடா வேறு ஆறிக் கொண்டிருந்தது. மற்ற சிப்பந்திகளையும் இருக்கைகளில் காணோம்.
வாசலுக்கு விரைந்தேன். கஷ்டமடா சாமி ! கார் டிரைவரை காணோம். எங்கே தொலைந்தான் இவன்? ஆட்டோ பிடித்து (டாக்ஸி பில் கிளைம் பண்ணிக்கலாம்), ஹெட் ஆபீஸ் போய் சேர்ந்தேன். உயர் அதிகாரியின் அறைக்குள் நுழைதேன்.
உள்ளே, அதிகாரியும் அவருடன் இன்னும் இரண்டு பேரும் அரட்டை. டீ, பிஸ்கட், வறுத்த முந்திரி இத்தியாதி மேஜையில் பரப்பிக்கிடந்தது.
“ என்ன உங்க ஆபீஸ்ல யாரும் சரியாய் வேலை செய்யறதில்லையாமே. எல்லா பைல்களும் முடங்கிஇருக்காமே. கம்ப்ளைன்ட்க்கு மேல கம்ப்ளைன்ட்” சாடினார் அதிகாரி.
“சாரி, சார்! என் பேரில் எந்த குறையும் இல்லே, அக்கௌன்டன்ட் தான் சரியில்லே. வேலைத்திறன் போதாது.” முனகினேன்.
“இங்கே பாருங்க! நீங்கதான் உங்க கீழே வேலை செய்யறவங்களிடம் திறமையாக வேலை வாங்கணும். கண்ட்ரோல் வேணும் சார் ஆபீசில். பார்த்து பண்ணுங்க, கம்ப்ளைன்ட் வராமல் பார்த்துக்கோங்க! நேரே கம்பளைன்ட் செக்ஷனுக்கு போய் என்னன்னு பாருங்க. வெறுமே வாயிலே வடை சுட்டாமட்டும் போதாது !" – சொல்லிவிட்டு , அவர் தன் வாயில் கொஞ்சம் முந்திரியை போட்டுக்கொண்டார்.
கூழைக்கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்தேன்.
கோபம் கோபமாக வந்தது . “சே! என்ன புழைப்புடா இது ! என் திறமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே ! யாருமே கடமையில் கருத்தாக இல்லையே! இந்த ஆபீஸ் விளங்கினால்போலத்தான். நான் மட்டும்தான் இங்கே உழைக்கணுமா என்ன ? ” நொந்து கொண்டே ஆட்டோ பிடிக்க நடந்தேன்.
****
முற்றும்.