பார் போற்ற நீவாழ்ந்திடு

மலர்ந்திட்ட ஆம்பலின் மகிழ்ச்சியோ
புலர்ந்திட்ட பொழுதின் புன்னகையோ !
மழலையின் கள்ளமில்லா மறுமுகமா
மனங்களை ஈர்த்திடும் இன்முகமோ !
உலகை அறியாததன் வெளிப்பாடா
உணர்ந்த காரணத்தின் உவகையா !
உள்ளக் களிப்பின் எல்லை விளிம்பா
உள்ளத்தின் வெள்ளைக்கு விளம்பரமா !
சாதிமதங்களை கேட்டதன் விளைவா
சாதனைதான் என்று நினைத்ததாலா !
அரசியல் நிலயை விளக்கி கூறியதால்
அடக்க முடியாத ஆரவார சிரிப்பா !
பகுத்தறிவுடன் நீ வளர்ந்திடு என்றதால்
பயனை புரிந்ததும் பன்மடங்கு பூரிப்பா !
அறிவுரைகள் என்று ஆரம்பித்தவுடன்
அவசியமதானா என்று கேலிசிரிப்பா !
பார் போற்ற நீவாழ்ந்திடு என்றவுடன்
பாரின் நிலையை நினைத்து சிரிப்பா !
வளரும் முன்னரே மலரும் கற்பனைகளா
வளர்ந்த பின்னால் வருந்த கூடாதென்பதால் !
ஆம்பல் = தாமரை
பழனி குமார்