வாழ்க்கை எனும் பூமாலை
மனித வாழ்க்கை
என்னளவில் – ஒரு
பூமாலை போல.
பலபேர் பங்களிப்பில்
பகுதிகளாய்க் கட்டினாலும்
உருவாவதென்னவோ
ஒவ்வொருவர் விருப்பம்போலே.
நம் மனமென்னும் தோட்டத்தில்
கனவுகளில் பாத்தி கட்டி
குறிக்கோள் விதைகள் போட்டு
ஆசை நீரூற்றி
கவனமாய் களையெடுத்து
ஏக்கத்துடன் காவல் செய்ய
எண்ணமும் செயலுமாய்
ஏராளமாய் பூக்கள்
சிறியதாய் பெரியதாய்
மென்மையாய் முரடாய்
அழகாய் அசிங்கமாய்
வாசமாய் வாசமின்றி
வண்ண வண்ணமாய்
எண்ணிலடங்காப் பூக்கள்.
எதை விதைத்தோமோ
அதுவே பூக்கிறது.
ஒருவர் வாழ்க்கை கூட
ஒருமலர் மாலையில்லை.
பலவண்ணப் பூக்களில்
பலவாறாய்க் கட்டியது.
பகட்டு வாழ்க்கை
கண்ணைப் பிடுங்கும்
வண்ணப் பூமாலை.
வண்ணமும் வாசமும்
விண்ணளவு வேண்டுமென
புகழ்ச்சியும் தற்பெருமையும்
நூலாய்க்கொண்டு
வேண்டிக் கட்டுவது – பலரும்
வேண்டாமல் ரசிப்பது
வேகமாய் வாடிவிடும்
வாடியபின் நாறிவிடும்.
வல்லியல்புகளே மலராய்
சுயலாபம் நூல்கொண்டு
பேராசையில் தொடுத்த
பெருமாலை..
தொடுக்கும்போதிருப்பது போல்
அணியும்போல் இருப்பதில்லை.
வெறுப்புக் கொள்ளவைக்கும்
வீசிவிட வீண்போகும்.
நல்லியல்பு மலர்கள் கொண்டு
நயமுடன் அக்கறையாய்
திருப்தியில் கட்டிய
அழகு மாலை..
அளவாயிருக்கும் – அணிய
ஆசையாயிருக்கும்.
எவர் கண்ணும் நோகாது
எளிதில் வாடாது
எப்போதும் வாசம் தரும்.
மாலைபற்றிய
மயக்கம் தெளிந்ததின்று.
இதுவரைக் கட்டியதில்
இனியும் விருப்பமில்லை.
புது மாலை வேண்டுமென்று
புகுந்துவிட்டேன் தோட்டத்தில்.
புத்தம்புது பாத்திகட்டி
புதிதாய்ப் பயிர்செய்வேன்.
மிச்சமிருக்கும் காலத்தில்
மிதமாய் பூவளர்த்து
இனிதாய் ஒரு மாலை
இன்பமுடன் கட்டிடுவேன்.
உங்கள் பூமாலை
உவப்பாயிருக்கிறதா?
உண்மையாய் உணருங்கள்.
இல்லையெனில் இன்றே
கட்டியவரை விட்டுவிட்டு
புதிதாயொன்றை
புத்தியுடன் கட்டுங்கள்
பூரணமாய் வாழுங்கள்.