சிவ சிவ சிவனே

பிறை சூடிய பித்தனே
அர வணிந்த அத்தனே
கயிலை வாழ் சித்தனே
சுடலை நீறணி சுத்தனே ...!!

நெற்றியில் கண் கொண்டோனே
கங்கை சடையில் வைத்தோனே
புலித் தோலை அணிந்தோனே
திரி சூலம் ஏந்தியோனே ....!!

தில்லை வாழ் கூத்தனே
லிங்கத் திரு மேனியனே
சடா முடி தரித்தோனே
தன்னில் சக்தி இணைத்தோனே....!!

தாண்டவ மாடும் சபேசனே
திரிபுர மெரித்த ஈசனே
பண் ணிசைக்க மகிழ்வோனே
பஞ்ச பூதமாய் நிறைந்தோனே ....!!

ஆல கால முண்டோனே
நீல கண்ட நாயகனே
மண் பிட்டுக்கு சுமந்தோனே
நரியைப் பரி ஆக்கியோனே ...!!

காமனைக் கண்ணால் எரித்தோனே
காலனைக் காலால் உதைத்தோனே
ஜோதிர் லிங்கமாய் இருப்போனே
ஜோதியாய் காட்சி தந்தோனே ...!!

சிவாய நமவெனச் சொன்னால்
அபாய மிலையென வருவாய்
உபாய மிதுவென உணர்த்தி
அபய மளிப்பாய் சிவனே ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Feb-14, 5:30 pm)
பார்வை : 3186

மேலே