விலங்கவிழ விழைவீர்
பன்னிரு பல் சக்கரத்தில்
பிணைந்துழலும் பிறவி நாம்.
காலன் கைக்கரும்பு.
விதியின் வீச்சில் துரும்பு.
உடலே நாம் என்றுணர
உன்மத்தம் பிடிக்கிறது.
“நான், எனது, என்னுடைய”
இச் சொற்கூண்டுக்குள்
அறியாமைக் குடித்தனம்
அமர்க்களமாய் நடக்கிறது.
புலன்கள்வழி புலப்படுயாவும்
பிரித்தெடுக்கும் மனம்.
பிடித்ததை பிடியில்கொள்ள
பிடிக்காதது விட்டுவிலக
மனம் போடும் சாலையிலே
மரணம் வரை பயணம்.
சேர்த்த மூட்டை ஓட்டைவழி
சாகும்போது சிந்தியது
அடுத்த பிறப்புக் கடிபோடும்
அவலம் புரிகிறதா?
புதுப் பானை பொத்திவைத்து
பழஞ்சோறே உருமாற்றம்.
பரிதாபப் பிறப்பிறப்பு
பலதடவை நடக்கிறது.
ஒருதடவையேனும்
இவ் வுண்மை விளங்குமாயின்
மறுபிறப்புச் சங்கிலியை
மளுக்கென்று முறித்திடலாம்.
எங்கும் நான்
எதுவும் எனது
என்னுடைய கொடியே
எங்கும் பறக்கவேண்டும்
என்றெல்லாம் நினைக்கும்வரை
துன்பக்குழி உழலல்.
உழலுவது உணர்ந்தால்
கழலுது விதிவிலங்கு.
விலங்கவிழ விடுதலை
துலங்கிடும் பேரமைதி.

