கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15
அத்தியாயம். 15
தலைமை ஆசிரிரியர் கமலா வீட்டிற்குள் வருகை தருகிறார்.கமாலாவின் தந்தை உரிய மரியாதையுடன் இரு கைகூப்பி வணங்கி வணக்கம் கூறி நாற்காலியில் அமர வேண்டுகிறார்.
“அய்யா வணக்கம்! வாருங்கள்.உட்காருங்கள்!.ஏம்மா கமலா உங்க சார் வந்திருக்கார் பாரு.அப்படியே அய்யாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா!.”இந்த வார்த்தைகைகளைக் கேட்டவுடன் கமலாவுக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகிறது என்பது போன்று பூரிப்பு.அவளுக்குள் ஏற்படுகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
“இதோ வாரேம்ப்பா!.என குடுகுடுவென ஓடுகிறாள் அலமாரியிலுள்ள புத்தம் புதிய பளபளக்கும் டம்லரைத்தேடி எடுக்கிறாள்.இருக்கிற பளபளப்பு போதாதென்று மேலும்மேலும் அதை நன்றாக துலக்கி சுத்தமாக குளிர்ந்த தெளிந்த நீரை முதலில் கொண்டு வரும்போதே மிகவும் பவ்வியமாக “வணக்கம் சார்”!எனும் வணக்கம் கூறும் மொழியில் "என்னை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுங்கள்"எனக் கெஞ்சுவது போல் தன்னுடைய உள்ளுணர்வை அந்த ஒற்றைச்சொல்லில் மௌனமாக வெளிப்படுத்தினாள்.ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் கற்றவர்கள்.அந்த ஏக்கமான மௌனமொழியைப்பற்றிப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன.கமாலாவிடமிருந்து அந்தத் தண்ணீரை வாங்கும்போது”கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் “என ஆறுதல் சொல்வது போன்று “ம்ம்ம்ம்.எப்படிம்மா இருக்க! கமலா!நல்லா இருக்கியா?என்றார். அந்த அன்பான மொழி அவள் செவிகளைத் தொட்ட தருணத்தில் கமலாவின் விழிகளில் பனித்துளிகள் போன்று சில துளிகள் துளிர்த்து மீள்கின்றன.சில சொட்டுகள் தரையில் பொட்டென உதிர்கின்றன.
கமலாவின் மனக்கவலையைப் புரிந்து கொண்டவராய் ,"சரிம்மா நீ உள்ளே போ நான் ஆச்சியைப்பற்றி அப்பாவிடம் விசாரிக்க வேண்டும்”எனக் கூறி “கவலைப்படாதே!நல்லதே நடக்கும் “எனக் கண்சாடை செய்கிறார் பண்புள்ள தலைமை ஆசிரிரியர்.கமலா உள்ளே நகர்கிறாள்.
“சரி சார் ஆச்சி எப்படி இருக்குறாங்க.பூரணமாக் குணமாயிட்டாங்களா?என ஆசிரியர் தன் பேச்சைத் சாதுர்யமாகத் துவக்கினார்.
.
“பரவாயில்லை அய்யா.ஒண்ணும் பிரச்சனை இல்ல நல்லா சுகமாயிட்டாங்க..ஏதோ கடவுள் புண்ணியத்தில முழுசா குணமாகி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க..அய்யா! ஏங் வீடு தேடி வந்து விசாரிக்கிறது என்னுடைய பாக்கியம் அய்யா! “என மீண்டும் நன்றி கூறும் விதமாக கைகூப்பி வணங்கினார்.
“ஆச்சியைப் பாக்குற சாக்குல அப்படியே கமலாவையும் பாத்துக்கிட்டுப் போகலாமே!ஒரே கல்லுல ரெண்டு மாங்கா எப்படி?’எனும் நகைச்சுவையோடு பேச்சை லாவகமாக நகர்த்தினார்.
இருவரும் கொள்ளென மனம் விட்டுச்சிரித்தனர் “கமலா எம்பொண்ணு மாதிரியாச்சே.அதுமாத்திரமல்ல அவா நல்லாப் படிக்கிற பொண்ணு.கமலா மேல எனக்குத்தனி அக்கறையுண்டு.அவள எப்போப் பாப்போம்ன்னு இருந்தது.இப்போ ஆச்சியால அந்த வாய்ப்புக்கிடைச்சது.விடுவேனா என்ன? இதுதான் நல்ல வாய்ப்புன்னு நினச்சேன் உடனே கெளம்பி வந்துட்டேன்.எப்படி சார்?”என நளினமாகப் பேசி கமலாவின் தந்தையின் எதிர் வினையைக் கவனிக்கிறார் தலைமை ஆசிரியர். அப்போது கமலாவின் தந்தையின் முகத்தில் ஈ ஆடவில்லை.அவருக்குள் ஏதோவொரு குற்ற உணர்வு அவரது முகப்பொலிவு மாறுவது ஆசிரியர்க்குப் புரிகிறது.அவருக்கு நம்பிக்கையும் வருகிறது.இந்தப் பழம் கனியும் என்றும் புரிகிறது.
மேலும் தான் குறி வைக்கும் இலக்கிற்கு எவ்விதம் காயை லாவகமாக நகர்த்தலாம் என்பதற்கும் அந்த வீட்டுக்குள்ளேயே தந்திரம் தேடி சுவர்களைச்சுற்றும் முற்றும் பார்க்கிறார்.சுவரிலே வள்ளலார் படமும்,பாரதியார் படமும் கூடவே காராஜரும் பெரியாரும் சேர்ந்து உரையாடுவது போன்ற படங்களும் ஆசிரியரின் கண்களுக்கு கலங்கரை விளக்கங்களாகக் காட்சியளிப்பதோடு நன்னம்பிக்கை முனைகளாகவும் ஆசிரியர்க்கு வழிகாட்டிகளாவும் அப்படங்களில் உள்ள மகாத்மாக்கள் பிரகாசித்தார்கள்.அப்போது நல்லது நடக்கும் என்றும்.பெண்விடுதலையைப் பற்றி பேசவும் வந்த அந்த நல்ல உள்ளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாமா?அவர் எண்ணி வந்த வேலை எவ்வளவு சுலபமாகப் போகிறது என்பதை எண்ணித்துள்ளிய அவருடைய அந்த அன்பு மனம் எந்த அளவில் நம்பிக்கையோடு ஆனந்தக்கூத்தாடி களித்திருக்கும் என்பதை எண்ணி எண்ணி நாமும் அவரோடு களிநடனம் ஆடி மகிழ்வோமா? ,
சரி களிநடனம் ஆடிக்கொண்டாடியது போதும் கதைக்கு வருவோம்.இப்போது மறு மலர்ச்சி பெற்றவராய் புத்துணர்வு பெற்ற புதுப்பொலிவுடன் அவர் நம்பிக்கை பெற்றார் என்பதை அவருடைய முகம் ஆயிரம் ஒளி சக்தி பெற்ற மின்விளக்காய் சொலித்தது.அப்போது அவர் பேச்சை மிகவும் மென்மையாக இதமாக கனிவாக மேலும் ஒரு புதிய கோணத்தில் திருப்புகிறார்.அப்போதுதான் அவர் கற்ற உளவியல் அவருக்குக் கைகொடுக்கிறது.
“சார் இந்தப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ!”என மல்லிகை அவில்வதுபோல் சொற்களை தன் அழகான பாணியில் இனிக்கும் விதமாகக் கேட்கிறார்.
அவரும் புன்சிரிப்போடு”ஆமாம் அய்யா அவர்கள்.அத்தனை பேருமே.என் மனதுக்கு மிகவும் பிடித்தவர்கள்..சுருங்கச்சொன்னால் நான் அவர்களின் தாசன்”என்றார்.
“உண்மையில் உங்கள நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு.நீங்க எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பெரிய மனுசர் என்பது இந்தப் படங்களைப் பார்க்கும் போதே என்னால புரிஞ்சிக்கிட முடியிது.ஆகா எப்பேர்ப்பட்ட மகான்கள் இவர்கள்.இவர்கள் படங்களாக அல்ல நமக்குப் பாடங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.”எனப்புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென அவரைப்பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார்.
“தங்களைப் பார்த்தால் பார்வைக்கு பக்திப்பழமாகத் தெரிகிறீர்கள்..............எனப் பேச்சை முடிக்கத் தயங்கி இழுத்தார்.ஆசிரியர்.
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.”அய்யா நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெளிவாவே புரியுது.பெரியார எப்படிப் புடிக்கும்முண்ணுதான கேக்கவர்றீங்க?
ஆமோதிப்பதுபோல் தலைமை ஆசிரியர் இதமாகத் தலை அசைத்தார்.
“பொதுவாக சிலர் அப்படித்தான் சொல்றாங்க,பெரியார் ஒரு நாத்திகர் அவரை எப்படி ஆத்திகர்கள் நேசிக்கமுடியும்முன்னு.அவர்கள் அவரை புரிந்து கொண்டவிதம்.அவ்வளவுதான்.அவரை பற்றி யாரும் இன்னமும் சரியான விளக்கம் தர முயற்சிக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது ஆத்திகத்திற்கு எதிரான ஒன்றல்ல.ஒரு மார்க்கத்தை சீர் படுத்த முயன்ற ஒரு புதிய மார்க்கம்தான் நாத்திகம் என்பதே என்னுடைய வாதம்.ஆரம்ப காலத்தில் இத்தனை மதங்கள் இருந்தனவா?இல்லையே!ஒன்றை சீர் செய்ய மற்றொன்றாகத் தோன்றியவைகள்தான் இன்று இத்தனை மதங்களும்.அப்படித்தான்இதுவும். இந்து மதச் சீர்திருத்தவாதிகளாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்.யூத மதத்தின் மறு மலர்ச்சியாக கிறித்தவம்.அதில் ஏசுபிரான் மற்றும் சீசர்கள்.இஸ்லாமில் சூபிக்கள் எல்லோருமே!.அப்படியானால் இவர்கள் எல்லாம் நாத்திகவாதிகளா?அதனால்தான் சொல்றேன்.பெரியாரும் ஒரு சீர்திருத்தவதின்னு ஏங் ஒப்புக்கொள்ள மறுக்கிராங்கன்னுதான் எனக்கு வெளங்கல்ல.
பெரியார் என்ன சொல்றார்.மக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்படுறதச்சொல்லுங்க மத்தது தேவை இல்லாம எதுக்குண்ணு கேக்குறாரு இது தப்பா?.பாரதியார் வள்ளலார் போன்றோரெல்லாம் என்ன சொன்னாக உண்மை எதுவோ அதைப்போற்றுங்கள்.மெய்யை மாத்திரம் வழிபடுங்கள்.நிசம் எதுவோ அதை நம்புங்கள்.யாரும் யாருக்கும் எஜமானர் அல்ல.அனைவரையும் சமமாகக் காணுங்கள்.மடமைகளை விட்டொழியுங்கள்.அப்படித்தான அவங்க சொன்னாங்க. .அதையேதான இவரும் சொன்னாரு.இதுல என்னொரு வித்தியாசம்ன்னா அவங்க பாட்டாப்படி கொஞ்சம் பதமாச்சொன்னாங்க.இவரு கொஞ்சம் கோவக்காரரு வெடுக்குன்னு வெள்ளையா புரியும்படியா கடுமையாச்சாடிட்டாரு.எதுக்கு அந்தக்கோவம்?.அவுரு வீட்டுக்கு அரிசி அறிக்கலயின்னா?எல்லாம் நாமஎல்லாம் நல்லா சுயமரியாதையோட வாழணும்னுதான அப்படிச்சொன்னாரு.ஒரு பழமொழி சொல்லுவாங்களே! எதுக்கோ எதோடயோ கோவிச்சிட்டுப்போற மாதிரின்னு.அப்படிகோவிச்சுக்கிட்டா யாருக்குநட்டம்?அய்யா ரொம்பப் படிச்சவுக உங்ககிட்ட நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாப் பேசிட்டனோ!”பௌவியமாக இறங்கிக் கொண்டார்.
“அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச்சொல்லி இருக்கீங்க.உண்மையாச்சொல்ரேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க.ன்னு அவரை பாராட்டிவிட்டு தன் இலக்கைத் தொடுகிறார் தலைமை ஆசிரியர்.
“சார் பெண் கல்வியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா. .