கலங்கள் இல்லை கலங்கல்

ஆலைச் சங்கொலி அடித்தபோது
ஒருவனுக்கு அஸ்தமித்தது
ஒருவனுக்கு ஆரம்பித்தது

என்னை நானே திட்டிக் கொண்டேன்
இளவயதில் கோலூன்றி
எழுந்து நடக்க முடியாமல்.....
என்னை நானே திட்டிக் கொண்டேன்

நிறமற்ற நீருக்கு
நிறம் கொடுக்கும் மண் போலவே
உன்னை நினைத்தேன்
திக்காய் நீவர திகட்டும்
என்று காத்திருந்தேன்

நரிகளின் ஊளைச் சத்தத்தில்
முதலைகள் கொண்டாட்டம் போட்டன
தலை நிமிர்ந்த தாமரை மொட்டுக்கள்
தொங்கி சோகையில் வாடின

மறுபிறப்புக்கு தவமிருந்த போது
மறுபடியும் உன்னை நினைக்காமல்
இருக்க வேண்டிக் கொண்டேன்

நீதிமான்கள் வியாதியில் படுத்திருக்க
வேட்டைக் காரர்கள் நகர்வலம் வந்தார்கள்
உள்ளம் சொல்கிறது
உத்தமனாய் இருப்பதை மறு பரிசீலனை செய்

கலங்கரை விளக்கங்கள்
கற்பழிப்பு செய்தபோது
கப்பல்கள் கலங்கித்தான் போயின
இங்கு -
கோடையில் பனி பொழிந்தது
குளிரில் வெயில் எரித்தது

களவாட வந்த கறையான்களுக்கு
நான் வைத்த கண்ணிவெடி வைத்ததில்
பொக்கிஷ பனுவல்கள்
பூமிக்குள் புதையுண்டன
புதிதாய் ஒருவன் தோண்டும்வரை
புதையல்கள் பூமிக்கடியில் .....

தீர்ப்பு எழுதப் படுவதற்கு முன்
நீதிபதியின் பேனாமுனை முறிந்தது...
அவனாகிய நான்....
எப்போது கோலின்றி நடந்து
கோட்டையை ஓடிவரப் போகிறேன்...

.மெல்ல உணர்ந்தேன் .
.இரவில் சூரியன் போவதுமில்லை
பகலில் சந்திரன் சாவதுமில்லை. ...

மாடத்து விளக்குத்திரி
எதையோ சொல்லி
முன்னும்பின்னும் அசைந்தது.....
அது காற்று என்றார் சிலர் ...
அது காத்து கருப்பு என்றார் பலர்.
பயத்தில் என்கண்கள்
பட்டாம் பூச்சியாய் படபடத்தன ......

எழுதியவர் : சுசீந்திரன் . (4-Mar-14, 7:45 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 59

மேலே