உலகை மறந்து உணர்வை துறந்து
மரத்திலிருந்து இலை உதிர்ந்தால்கூட
கேட்கும் நிசப்தமான வனத்தில்
சப்தமின்றி முத்தமிட்டுக்
கொண்டிருந்தோம்!
ஆண் பெண் மலரின்
கூடலின் தூதுவனாகிய
வண்டின் ரீங்கார இசையில்
மயங்கிச் சரிந்தோம்
மரங்கள் உதிர்த்த
மலர்களின் கம்பளத்தில்!
மலரத் துடிக்கும்
மொட்டுகளின் பிளவிலிருந்து
வெளியேறிக் கொண்டிருக்கும்
இதழ்களின் தவிப்புடன்..
மணித்துளிகளின் கணக்கில்லாமல்
சிறு காற்று கூட உள்
நுழையா வண்ணம்
இறுக அணைத்துக் கொண்டிருக்கும்
பாம்பகளின் நெருக்கத்துடன்..
தன் இணையை புணர அழைக்கும்
புள்ளினத்தின்
சமிஞ்சை ஓசையின் ஏக்கத்துடன்..
மலரினும் மெல்லிய இதழ்களால்
நிரம்பி வழியும் தேனை
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சியின் மென்மையுடன்..
துளிர் விட்டது முதல்
சருகாகும் வரை
ஒன்றை ஒன்று
தழுவிக் கொண்டிருக்கும்
கொடிகளின் காதலுடன்..
இலைகளைத் தழுவி
சிரமப்பட்டு விலக்கி
உள் நுழையும் அரைகுறை
சூரிய ஒளியின் வெளிச்சத்தில்
இயற்கையுடன் கலந்தோம்!!