வருசக்காட்டு புழுதிச் சாரல்
செம்பு நெறத்தவளே..
சீம்பாலு குணத்தவளே...
சித்திரை நெலா முகத்தவளே..
சோடிக்காள பூட்டிக்கிட்டு
கூட்டுவண்டி ஏறிவாரேம்...
சேந்துவாழ மொற கேட்டு .....!!
மாமரத்து மாரழகா..
மருதாணியிலக் கண்ணழகா....
வைகாசிப் பந்தலுல
செவ்வந்திப்பூவும் வச்சி
வஞ்சி நானும் காத்திருக்கேம்....!!!
ஆனித் தேராட்டமா
அலங்கரிச்சி நிப்பவளே.. ஒம்
அரையங்குல அல்லியொதட
அளந்தெடுத்து தருவியாடி...?
அசைபோட்டு நா மெல்ல...!!
ஆடிக்காத்து அடிச்சாலும்
பாறையுருட்ட முடியாது...
அதுபோலத் தானிருக்கும்
அசையாம எம்பாசம்...
அளவெடுத்த மிச்சம் வேணா,..
அள்ளிட்டுப்போ அப்படியே...!!!
மண்ணே .. மழைகாத்தே..
மஞ்சப்பூசும் மலர்க்காடே...
ஆவணிக்குயிலு ராகம்
தேடி இழுத்து வரும்.. ஒந்
தாவணி நீளந் தேடி....!!!
புரட்டாசி புதுச்சாரல்
பூட்டிவச்ச குடிசைக்குள்ள
வெக்கமும் வெலகலுமா
வெரகமும் வேர்வையுமா
பூக்காடும்... புழுதிக்காடும்...!!!
தொரக்கமறந்த புதுச்சாவி
துருப்புடிச்சி இத்துப்போச்சி..
சிரிச்சி நெறஞ்ச செல்லெல்லாம்
சிணுங்கலுக்குப் பழகிருச்சி.. .!!
சாரலுக்குப் பழகிப்போன
தேகத்துக்குத் தெரியவில்ல ..
ஐப்பசிக் கனமழையும்
அடிச்சித் தொவச்ச நெல்லுக்காட...!!
பிஞ்சழிஞ்ச பயிருகளும்
நஞ்சிபோன நாத்துகளும்..
கார்த்திகைக் கடுங்குளுருல
கண்டபடி வெறச்சி நிக்க...
வெறிச்ச பார்வை நெல ..
நிலத்து மேலெ நெலச்சிருக்கு....!!
மார்கழிக் காலைப்பனி
மனசுவருடிப் போனாலும்
ஈரம் மட்டும் நிரந்தரமா
இடுப்புத் துண்டு முடிச்சிலயும்...
இடுங்கிப் போன கண்ணுலயும்...!!
தடவித் தடுமாறி
தங்கம் வித்துக் கைமாத்தி
தையிலே வெதச்சிருக்கேம்..
தரமா நாலு உளுந்துவெத...!!
தாரம் நிக்கணும்.. அவந்
தாலியும் நிக்கணும்... பூமித்
தாயி நீ காத்து நில்லு...!!
மாரியாத்தா வாசலில
மாசிமக மொளப்பாரி
கம்பீரமா மொளைவிட்டு
அரிச்செடுத்த உளுந்து நாலு..
மழைத்தாயி கருண வச்சா..
கண்ணீர்க்கோட அழிச்சிப்புட்டா...
பதமாத்தா பாத்து வெச்சோம்..
பாசத்தோட பங்குனிப் படையல்..
இன்னமும்
பாதந் தொட்டு தொழுது நிக்கேம்
பாதிவயித்துக் காத்தோட...!!!
இந்தப் படைப்பினுள் நம் தமிழ் மாதங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி இணைத்திருக்கிறேன்... படித்துவிட்டுக் கருத்துப் பகிருங்கள்.... நன்றி..!!!