யுத்த சூன்யம் - கே-எஸ்-கலை

அற்றத்தைத் தூவிடும் வண்ணம்
==ஆள்பவர் வகுத்திடும் திட்டம் !
முற்றத்து மரத்தடி வரவும்
==முடியாமல் தடுத்திடும் சட்டம் !
சுற்றத்துச் சாலைகள் தோறும்
==சிப்பாய்கள் ஆடிடும் கொட்டம்!
குற்றத்தை ஏற்றிட மறுக்கும்
==குருதியை அருந்தியக் கூட்டம் !

துயருடன் துன்பங்கள் வாட்டும்
==துடித்திடும் இதயங்கள் கதறும் !
உயரிடம் காதினில் கேட்டும்
==ஊமையாய்ப் பாசாங்கு காட்டும் !
அயர்ந்திடும் அப்பாவிக் கூட்டம்
==அனாதையாய் அகதியாய் சுற்றும்!
கயமையே கடனெனக் காட்டும்
==கயவரின் கடமைகள் மட்டும் !

கொழுந்து விட்டெரித் தீப்போல்
==கொடுமை எரிப்பதும் ஏனோ?
அழுந்துச் சிதைந்திடும் குலத்தை
==அழிவினில் மீட்பதும் யாரோ ?
விழுந்துக் கிடக்குமிந்த தேசம்
==வீறுடன் மீள்வதும் எப்போ ?
எழுந்து நடக்கும்மந்த நாளும்
==எட்டாக் கனியாகிப் போமோ ?

சுவர்களில் சன்னங்கள் முத்தம்
==சுவடுகள் ஆயிரம் மீட்டும் !
உவர்ந்திடும் கன்னங்கள் நித்தம்
==உளறல்கள் சட்டெனச் சொட்டும்!
கவர்ந்திடும் பேச்சினில் மட்டும்
==கபடங்கள் சூளுரைக் கொட்டும் !
துவள்ந்திடும் மாந்தரின் வாழ்வில்
==துயரங்கள் எப்போது முற்றும் ?
-----------------------------------
அற்றம்=அச்சம்/அழிவு ----- அழுந்து=புதைந்து

எழுதியவர் : கே.எஸ்.கலை (12-Mar-14, 1:02 am)
பார்வை : 136

மேலே