படித்துத்தான் பாருங்களேன்
வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா
என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.
“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!