பெய்யெனப்பெய்யும் மழை
வள்ளுவன் வார்த்தை இங்கே
வலுவிழந்து போனதே
வள்ளலான வானமே
சிக்கனத்திற்குள் சிறைப்பட்டுக்கொண்டதே
கண்ணகி வம்சத்து
கண்மணிகள் சிலர்
மாதவி வம்சத்துக்கு மருவியதால்
பெய்யெனப்பெய்யும் மழையும்
பொய்த்துப் போனதோ
மேகத்திற்கு மேகம்மீது
மோகம் வந்தால் தானே
வயல்களின் தாகம் தீரும்
வாழ்வின் சோகம் தீரும்
நீரை வேகமாய்
பிரசவிக்கும் மேகங்களுக்கு
மோகம் வராததால்
வயல்களின் தாகம் தீரவில்லையே
வாழ்வின் சோகமும் தீரவில்லையே
மோகன மேகங்களே - உம்
மோகம் தீர்ந்துவிட்டதா
ஆசை அறுந்துவிட்டதா
அதிகம் குடித்தால்
ஆண்மை இழக்குமாமே
ஆகாததை குடித்தாலும்
ஆண்மை இழக்குமாமே
ஆண்மேகமே
அதிகம் குடித்து
ஆண்மை இழந்து போனாயோ - இல்லை
ஆகாத(மாசான) நீரைக் குடித்து
ஆண்மை இழந்து போனாயோ
பெண்மேகமே - உன்
கர்ப்பப்பைக்குள் கட்டியா - இல்லை
உனக்கும் தெரியாமல்
கர்ப்பத்தடை செய்து விட்டார்களா
வெப்பம் தணிக்கும்
கன்னி மேகமே
கர்ப்பம் கலைக்கும் உத்தியை
கற்று விட்டாயா நீயும்
பிறருக்கு தெரியாமல்
பிரசவிப்பதுதான் இன்றைய பேஷனாம்
கண்காணாத தேசத்தில
கட்சிதமாய் பிரசவித்து புதைக்கிறாயோ
கார்மேகமே
தங்கத் தொட்டிலாய்
குளக் கட்டிருக்க
குப்பைத் தொட்டியான
கடல் தட்டிலா
பிரசவிக்கிறாய் மழையை
அணைக்கவென
அணைக்கட்டிருக்கு
அரவணைக்கவென
அழைத்து தானிருக்கு
பருவம் நீ வருவாயென்று
பருவப் பெண்ணாய்
பயிர்கள் காத்திருக்கு
அக்கறை ஏதுமின்றி
அக்கரையில நீயிருக்காய்
இக்கரைக்கு நீ வந்து
சக்கரையாய் இனிக்காயோ