உயிர் எழுத்தான மனிதன்

அவரவர் அவரின் மனதை
அவரே முழுதும் அறிந்தாலே
அவரே அறிஞர்தான் !
ஆவலை அடக்கி ஆளும்
ஆற்றலை கொண்டவரே
ஆளும் திறனாளிதான் !
இன்முகம் கொண்டு
இனிதாக பேசுபவர்
இன்பம் அடைபவரே !
ஈகையுள்ள அகமும்
ஈர்த்திடும் முகமுமே
ஈட்டிடும் நட்பை என்றும் !
உருகிடும் உள்ளமுடன்
உள்ளமும் வெள்ளையாய்
உடையவனே சிறந்தவன் !
ஊமையாய் பிறந்தாலும்
ஊரே வியந்திட வாழ்பவனை
ஊரும் உலகும் போற்றிடும் !
எளிமையே என்றும் நிலைத்து
எந்நிலையிலும் பணிவுள்ளவன்
எதிரியே ஆனாலும் உயர்ந்தவனே !
ஏழை உயிர்களுக்கு உதவுபவன்
ஏற்றம் பெற்றிட உழைப்பவன்
ஏக்கங்களை எரித்து வாழ்பவன் !
ஐம்புலன்களை அடக்கியும்
ஐந்தறிவையும் மதிப்பவனே
ஐயமில்லை அவனே மனிதன் !
ஒற்றுமை உணர்வு ஓங்கிடவே
ஒலித்திடும் குரல் உள்ளவனே
ஒருமைப்பாட்டின் சின்னமே !
ஓரினம்தான் மனிதஇனம் என்று
ஓயாமல் ஓங்கி உழைப்பவனே
ஒன்னாரும் புகழ வாழ்ந்திடுவான் !
ஔவையின் ஆத்திச்சூடி போல
ஔவியம் அறவே அகற்றினால்
ஔடதம் அதுவே உள்ளத்திற்கு !
( ஒன்னார் = பகைவர் )
( ஔவியம்= பொறாமை )
பழனி குமார்