- கட்டுரை- அசை, அலகிடுதல் பற்றிய குறிப்பு
தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தில் இப்பொழுது
அசை பற்றியும், அலகிடுதல் பற்றியும் பார்ப்போம்:
-அசைக்கப் பெறுவது அசை எனப்படும்;
-எழுத்துகளால் அசைத்து இசை கொள்ளுதலால் அசை எனப்படும்;
-ஒலியின் வடிவம் எழுத்து;
-எழுத்தால் ஆனது அசை;
-அசையால் ஆனது சீர்;
-சீரை ஒன்றோடொன்றைப் பொருத்திப் பார்ப்பது தளை;
-தளை=கட்டு; தளைத்துப் பார்ப்பது=கட்டிப் பார்ப்பது;
-சீர்களால் ஆவது அடி;
=அடிகளால் ஆவது பா;(பாவினம்)
-அசைக்கும் உறுப்புகள் உண்டு;அவை:
-குறில், நெடில், உயிர்,குற்றியலுகரம், குற்றியலிகரம்;
ஐகாரக் குறுக்கம்;ஆய்தம்; மெய்,வல்லினம், மெல்லினம்,இடையினம், உயிர்மெய்,அளபெடை என்பன.
அக/ர/ முத/ல/ எழுத்/தெல்/லாம்/ ஆ/தி/
பக/வன்/ முதற்/றே/ உலகு ---என்ற திருக்குறள்
புளி/மா/ புளி/மா/ புளி/மாங்/காய்/ தே/மா/
புளி/மா/ புளி/மா/ பிறப்பு. -----என்று அலகிடப்படும்;
நேரசை:
************
-நேரசை என்பது இரண்டு மாத்திரை உடையது; சமமானது;
-குற்றெழுத்துத் தனித்தோ- குற்றெழுத்து ஒற்றடுத்தோ-
நெட்டெழுத்துத் தனித்தோ- நெட்டெழுத்து ஒற்றடுத்தோ-
வருதல் நேரசையாகும்;
-குறில் எப்பொழுதும் சீரின் முதலாகத் தனித்து வாராது;
-ஒற்றெழுத்தை அடுத்தும், இரு குறில் இணைந்தும்தான் வரும்;
-நமக்கு வேண்டிய அளவு கணக்கிட்ட பிறகு, இறுதியில் குறில் தனித்து வருமானால், அப்பொழுதே அது நேரசையாகும்.
எ-டு: அக/ர – குறில் இணைந்து வந்தது -அக; குறில் தனித்து வந்தது -ர;
எ-டு: கற்/க – ஒற்றடுத்த குறில்-கற்; தனிக்குறில்-க;
-இதே போல்தான், நெட்டெழுத்துத் தனித்தோ, ஒற்றடுத்தோ வந்து காணப்படும் நேரசைக்கு எடுத்துக் காட்டாக :
பந்தமும் வாசத்தைப் பார்த்து வருமோ?சொல்!
இந்தியனாய் என்றும் இரு!------(எசேக்கியல்காளியப்பன்)
என்ற குறட்பாவில் வரும் –‘வாசத்தை’ என்ற சீரை எடுத்துக் கொள்ளலாம்;
வா/சத்/தைப்/ - என்பதில் தனித்த நெட்டெழுத்து- ‘வா’’
ஒற்றடுத்த நெட்டெழுத்து -‘தைப்’ இவையிரண்டும் நேரசைகள்;
நிரையசை:
****************.
நிரையசை என்பது
-இரு குறில் இணைந்தும்,
-இரு குறில் இணைந்து ஒற்றடுத்தும்
-குறில் நெடில் இணைந்தும்,
-குறில் நெடில் ஒற்றடுத்தும் வந்து நிரையசை எனப்படும்;
எ.டு
பந்தமும் வாசத்தைப் பார்த்து வருமோ?சொல்!
இந்தியனாய் என்றும் இரு....என்ற அதே குறட்பாவில்
-வரு/மோ/சொல்- என்பதில் –வரு, இரு குறிலிணைந்த நிரையசை;
-பந்/தமும் =என்பதில் –தமும், ஒற்றடுத்த இருகுறிலிணைந்த நிரையசை;
எ.டு:
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்......என்ற திருக்குறளை எடுத்தால்
-உறாஅமை- என்பது அளபெடை, உறா/அமை/ =கரு/விளம் என்று அலகிடப்படும். இதில் உறா- குறில்.நெடில் இணைந்த நிரையசை;
-பெற்றியார்ப் – என்பது பெற்/றியார்ப்/ = கூ/விளம் என்று அலகிடப்பட்டு
றியார்ப்-என்பது ஒற்றடுத்த குறில்.நெடில் இணையாக நிரையசையாகும்;
********
இன்னும் வரலாம் ....