கருவறையிலிருந்து கல்லறை வரை ஒரு தாயின் குமுறல்

கருவறையின் சுவர்களை
கனமாய் நீ பிடித்த போது
கண்களில் ஆனந்த கண்ணீர்!
கருவறையிலிருந்து
கண்ணீருடன் நீ வெளி வந்த போது என்
இதயத்தில் கண்ணீர் !
கடமை தவறிய
கணவனை கண்ணீருடன் மன்னித்து
களிப்புடன் உன்னை களத்தில் இரக்க முனைந்தேன்
காய்ச்சிய கைகளோடும் காயங்களோடும்
கவலைகளையும் கண்ணீரையும்
கவளத்தில் உணவாய் உண்டு
கடினமான இறந்த காலத்தை இதுவும்
கடந்து போகும் என
கம்பீரமாய் கரை ஏற்றினேன் உன்னை
மணம் புரிந்தால்
மன வளர்ச்சி அடைவாய் என
மனதில் எண்ணி திருமணம் முடித்தேன்
மன முதிர்ச்சி இல்லாத
மண வாழ்வின் நிகழ்ச்சி
மரண வலியை தந்தது ..
உடலும் உயிரும்
உனக்காக என அர்ப்பணித்து
உன்னை ஆளாக்கினேன்
உடலும் உயிரும்
எதற்காக என கல்லறைக்காக
தவம் கிடந்து தவிக்கின்றேன் ..
அழையா விருந்தாளியானதால்
அனைவராலும் ஒதுக்கப்பட்டு
அடி மனதின் வலியால் சிதைகின்றேன்
ஒரு கவளம் சோற்றிற்கு
ஓராயிரம் வார்த்தைகள்!
ஓரமாய் முடக்கப் பட்டேன்
எண்ணங்களை உணர்ச்சிகளை
அப்போதும் முழுங்கி வாழ்ந்தேன்
இப்போதும் முழுங்கி வாழ பழக்கி கொண்டேன் !
கருவறையிலிருந்து
கல்லறை வரை வலிகள் !வலிகள் !
கர்ம வினை என சமாதானங்கள் !
கடந்த காலம் கற்று தந்த ஆழமான அனுபவம் ….
கட்டிய கணவனனாலும்
கருவில் சுமந்த மகனானாலும்
கடமையை செய்யுங்கள்
பலனை எதிர் பார்க்காதீர்கள்!