முயன்றிடு வென்றிடு

முயல் ,ஆமை வெல்லும்! முயலாமை வெல்லுமா?
தயங்கித் தடுமாறின் வெற்றி கிட்டிடுமா?
திண்ணையில் தூங்கினால் திரவியம் கொட்டுமா?
விண்ணைத் தாண்டினால் விளையுமே பரவசம்.

சிரமங்கள் இல்லாமல் சிகரம் எட்டுமா?
துடுப்பினைப் போடாமல் தோணியும் செல்லுமா?
எடுப்பதைத் துடிப்புடன் முடித்திட என்றும்
அடித்தளம் அமைப்பது முயற்சி ஒன்றே!

வினையினைத் திருவினை ஆக்கும் முயற்சி
தெய்வம் தராத வற்றை எல்லாம்
தயங்காமல் எடுத்துத் தருவது முயற்சி
தோல்வியை படிக்கல்லாய் ஆக்கிடும் முயற்சி !

தோற்றுக் கொண்டே இருப்பினும் அலைகள்
துடிப்புடன் திரும்பி வருவ தில்லையா?
அலையினைப் போலொரு அயராத உழைப்பு
அதுதானே தந்திடும் வெற்றிக்கு அழைப்பு !

ஊழ்வினை என்றெண்ணி வீழ்ந்து கிடவாது
உறுதியாய் உழைப்பின் பெறுவது வெற்றி
தேயினும் திரும்ப வளர்வது நிலவு
போயினும் மறுநாள் புலர்வது பகலு!

தோல்வியால் துண்டாலும் கொள்ளாது அயற்சி
துவளாமல் வெற்றிக்கு உழைப்பது முயற்சி
முயன்றிடும் எண்ணத்தை வளர்த்திடும் பயிற்சி
அப்போது தழுவிடும் வெற்றியின் உயர்ச்சி!

முயற்சி என்பது படி! தினமும் அதனைப் பிடி
தோல்விகள் எல்லாமும் தள்ளுபடி
வெற்றி ஒன்றுதான் இனி அத்துப்படி
இதுவே வாழ்வில் இனிமேல் செல்லுபடி !
*****************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-Mar-14, 8:03 pm)
பார்வை : 125

மேலே