மூர்க்கன்,உன் நினைவுடனே மோதுகிறேன்

உதட்டுச் சாயம் அழிந்திடச் செய்வாய்
உன்னில் நானோ கரைகிறேன்!
உண்மைப் பேச்சை உதட்டில் மறைப்பாய்
உனக்கோ என்னைத் தருகிறேன்!

கண்ணிமைப் பூச்சைக் கரைத்திட வந்தால்
காதல! உன்னை வெறுக்கிறேன்!
கண்ணியம் தவறி நடந்திட முயன்றால்
கண்ணீர் போலுனைத் துடைக்கிறேன்!
---------------------(வேறு)--------------------------
துன்பம் என்னைத் தொடும்பொழு தெல்லாம்
துரத்தும் உனது நினைவுகள்!
இன்பம் மனதுள் எட்டிப் பார்த்தால்
இதயத் துள்ளுன் கனவுகள்!

சோப்பு நுரையின் சுந்தரக் குமிழிகள்
சுற்றிலும் வரவே ஊதுவேன்!
மூப்பும் காலமும் முயன்றும் முடியா
மூர்க்கனுன் நினைவுடன் மோதுவேன்!
---------------------(வேறு)--------------------------
இளமை கடந்து சென்றாலும்
இதயம் துவண்டு நின்றாலும்
உளமே சிதைந்து கெட்டாலும்
உன்னை மறந்து வாழேனே!
++ ++

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (18-Mar-14, 6:49 am)
பார்வை : 121

மேலே