சீரழிக்கப்பட்ட என் தேசம்

எழுத வேண்டும் என்று என் மனது சொல்லியது..
எதை எழுதுவது என்று என் மூளை வினாவியது..
தோன்றியதை எழுது என்றது என் மனம்..

காகிதத்தை எடுத்தேன்..
கத்தியின் கூர்மை கொண்ட
பேனா முனையை கண்டு நகைத்தேன்..
இந்த கூர்மை எதை கெடுக்கப்போகிறதென்று...

நான் காணும் சமுகத்தை வர்ணிப்போம்
என்றெண்ணி...
தொடுத்தேன் போரினை காகிதத்தின் மேல்,
வார்த்தை வாள் கொண்டு...

அவசர உலகம்..
ஆடம்பர வாழ்க்கை..
பணக்காரர்கள் அதிகமிருக்கும் தேசம்..
ஆனால்..
அன்றாட வாழ்வுக்கு
அல்லல்படும் மனிதனும் இங்கு தான் அதிகம்...
ஏற்ற தாழ்வு கொண்ட நிலை...
இவை இங்கு ஏனோ..
மனித வளத்துக்கு பஞ்சமில்லை...
மனிதநேயமோ கடுகளவும் இல்லை...

வாழ்வின் அச்சாணி மாற்றம் பெற்றதுக்கு
காரணம் யார் அறிவாரோ...
கடந்து செல்லும் மேகங்களாய் மனிதர்கள்..
இணையதளத்தில் இளம் தலைமுறைகள்...

விஞ்ஞானம் என்றுரைத்து,
நம் மெய்ஞானம் அழித்துக்கொண்டோம்...
தேனியை போல் வேகமாய் செயல் படும் பலர்...
ஆனால் குறிக்கோள் தேனாக இருப்பதில்லை..
குறிக்கோள் இல்லாமல்
நெடுந்தூரம் பயணித்து பயன் என்னவோ..

பிச்சைக்காரனை குறை சொல்லும் சமுகம்..
தன் வேலைக்காக மட்டும்
அரசாங்க பிச்சைக்காரர்களுக்கு
பிச்சையிடுவது ஏன்...

படித்தவர்கள் அதிகம் இங்கே...
என் தேசத்தில் தான்...
ஆனால் குற்றங்களுக்கு இங்கு குறைவில்லை .

படித்து என்ன பயன்..
பகுத்தறிவின்றி பெண்களை
அழகு பதுமைகளாய் மட்டும் எண்ணி..
தேகத்துக்காக நாய்கள் போல் அலையும்
ஆணினம் இங்கு உள்ளதல்லவா...

"பிழை செய்யாமல்,
பிழைக்க முடியாது இவ்வுலகில்"
என்ற நிலை உருவாக்கப்பட்டது
மனிதர்களான நம்மால் தானே...

என் பார்வையில் சமூகம் தவறாக தெரிகிறதா
இல்லை
தவறான சமுகத்தை என் கண்கள் தெளிவாக பார்க்கிறதா...
என்று அறிய இயலவில்லை .

இச்சமுகத்தின் நிலை கண்டு வாழ பிடிக்காமல்
அருவருப்பாய் அனுதினமும்
இச்சமுகத்தில் மாற்றம் வேண்டும் என்றெண்ணி
வலம் வரும் என்னால் என்ன செய்ய இயலுமோ...

எழுதியவர் : அரவிந்த். C (19-Mar-14, 9:21 pm)
பார்வை : 765

மேலே