தாய்க்கு ஒரு பாமாலை 2
கருணையின் உருவமே கள்ளமில்லா மனமே
அன்பின் பிறப்பே அனைத்துயிரின் உயிர்ப்பே
கண்ணெதிர் தவமும் நீயே தாயே
என்னை கண்டெடுத்த தெய்வமும் நீயே தாயே .....
புனிதத்தின் புனிதமே பூவுலகின் தெய்வமே
தியாகத்தின் உருவமே நீயே தாயே
கருவறை மிஞ்சியே கோவிலும் இங்கில்லை
உன்னை மிஞ்சிடும் தெய்வமும் இங்கில்லை ......
நான் பிறந்த பொழுதிலே பிரம்மா நீயானாய்
என்னை காத்த பொழுதிலே விஷ்ணுவும் நீயானாய்
தீய பழக்கம் பலவும் அழித்ததால்
சிவனும் ஆகி சீருடன் வளர்த்தெடுத்தாய் .....
உன் உதிரம்தானே உடலும் ஆனது
உன் உழைப்புதானே என்னை வளர்த்தது
நீ சிந்தும் வியர்வையில் குருதியை பார்த்தேன்
நீ விட்ட கண்ணீரில் உன் துன்பத்தை பார்த்தேன் ....
அம்மா என்றிடும் ஒரே வார்த்தையில்
அனைத்தும் அடக்கியே வைத்தாய் தாயே
என்னை காத்த கடவுள் நீயே
எல்லாம் எனக்கு நீயே தாயே ......
இமயம் கூட என் கால்கள் தொடலாம்
எல்லா பெருமையும் எனக்கு வரலாம்
என்னை இயக்கம் சக்தி நீயே
எல்லாம் உன்னால் சாத்தியம் தாயே .....
நான் செய்த சாதனை ஏதும் இல்லை
எல்லாம் நீ தந்த உடலால் ஆனது
நான் பெரும் பேறுகள் எல்லாம் அம்மா
உன் காலடி ஒன்றுக்கே சமர்ப்பணம் அம்மா .....
என்னை தாங்கிய எந்தன் தாயே
உன்னை தாங்குதல் புண்ணியம் தானே
உயிருள்ள வரையில் நான் உந்தன் அடிமை
என் உயிர் பிரியும் காலம் உந்தன் மடியில் !