அந்த ஊருக்கு பெயரில்லை
உன்னைக் கூறுபோட்டு
பார்க்க விருப்பமில்லை
உன்னைக் கூறு போடுபவனை
பார்க்க விருப்பமில்லை
பாண்டக் குயவன்
பிடித்த கலவைமண்
கைதவறி உருவம் சிதைந்ததில்
மீண்டும் மண்கலவையானது.
நீர்வட்டம் போட்டு
நீபோடும் கோலம் நிசமில்லை
நிதர்சன வாழ்க்கைக்கு
பொய் சொல்லத் தெரியவில்லை
நியமங்களில் பயணித்து
நீ சாதித்ததென்ன
நத்தியல்(சங்கு) எடுத்து முழங்கு
நாளை உனக்காகும்
அழகு புறாக்களின் குடிலில்
அரவம் புகுந்து
புறாக்கள் பலியானதில்
பிரதேசமெங்கும் மயான நிர்மூலம்
அசை சீர்களால்
அழகு பெறும் பாவடி
மோனை எதுகையில்
மேலும் அழகு பெறுமடி
மன்னிப்பு இருப்பதால்
மரணங்கள் மறுபடியும் தவறு செய்கின்றன
தூக்கு கயிறுகள் -குற்றங்களை
தூக்கிப் பார்க்குமானால்
தூக்குக்கே தூக்கு நடக்கும்
இங்கு -
சகாராக்கள் உருகி தள்ளாடும்
மலைமுகடுகளில்
சமுத்திர நீர் பெருகி விளையாடும்
இவ்வளவு பிரளயத்திலும்
வானம் மட்டும்
வாய்திறக்காமல் வேடிக்கை பார்க்கும் .