ஒழுக்கம் போற்று மனிதா
ஒழுக்கம் என்பது நம்மில் வேண்டும்
உயர்வாய் அதனை போற்றல் வேண்டும்
உயிர்போல் அதனை மதித்தல் வேண்டும்
உயர்ந்த எண்ணம் நெஞ்சில் வேண்டும் ........
உலகில் நடக்கும் கொடுமை சிலதில்
ஒழுக்கம் தவறி நடப்பதும் உண்டு
உடலினை பற்றும் நோயினை போலே
மனதினை மாற்றும் தீய எண்ணம் ......
முறைகள் தவறி பாலியல் உறவு
நியதிகள் மீறி தனிப்பட்ட சுகங்கள்
பாடம் தேடும் பள்ளி குழந்தை
காமம் தேடும் கணினி அதனில் .......
ஒழுக்கம் மறந்த மனிதர் பலரால்
உயிர்கொல்லி நோய்கள் பலவும்
உலவும் நோயோ உயிரை தேடி
அதனால் போகும் உயிர்கள் கோடி .......
சீர்கெட்ட திரைப்படம் பலதில்
தீங்கிழைக்கும் காட்சிகள் இருக்கும்
காணுகின்ற பிள்ளைகள் பலதும்
பாழ்பட்டு போவதோ உண்மை .....
கள்ளம் கபடம் இல்லா மனதில்
காமம் முளைக்கும் சின்ன வயதில்
கற்கும் கல்வியின் புனிதம் மறந்து
காமம் தேடி எங்கோ பறக்கும் .....
உலகில் வாழும் மனிதர்களே
ஒழுக்கம் வேண்டும் புனிதர்களே
பிள்ளைகள் அவர்க்கு எல்லைகள் இட்டு
காத்திடவேண்டும் பெரியவர்களே ........
ஒழுக்கம் மிகுந்த கதைகள் சொல்வீர்
ஒழுக்கம் அதனின் மேன்மை சொல்வீர்
கல்வி மட்டும் வாழ்க்கை இல்லை
ஒழுக்கம் இன்றி எதுவும் இல்லை ......