நாடக உலகம்

முத்தமிழுள் ஒன்றானதும் ,கலைகளுள் சிறந்து விளங்குவதும் நாடகம் ஆகும் . மக்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி உணர்ச்சியும் ,ஊக்கமும் தருவதும் , சிந்தனை மலரும் வண்ணம் அறிவுச் சுரங்கமாக விளங்கிப் பொலிவதும் நாடகக்கலையே ஆகும் . ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாக தமிழில் எழிலும் ,ஏற்றமும் மிக்கதாக விளங்கும் நாடகம் காலந்தோறும் சமுதாய மலர்ச்சிக்கும் , மாற்றத்திற்கும் களனாக விளங்கி இருக்கிறது .

இந்த வகையில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ் நாடகம் ,படித்தவர்க்கும் பாமரர்க்கும் இடையில் நாட்டுப்பற்றினைப் பரப்பி பெரும்பணி ஆற்றியுள்ளது .நாடகத் துறையில் ஈடுபாடு காட்டிய ஆசிரியர்கள் பலர் ; கவிஞர்கள் பலர் ;கலைஞர்கள்
பலர் . நாடகங்கள் பல நேரங்களில் சமுதாய மறுமலர்ச்சிக்கும் ,சிறந்த பொழுது போக்கு அம்சமாக விளங்கி வந்துள்ளன .நாடகம் மூலம் நாட்டுப்பற்று தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும்
வெள்ளமெனப் பெருகியோடியது .

அக்கால நாடகக் கலைஞர்கள் தம் நடிப்பினால் மட்டுமன்றி ,உரத்த குரலெடுத்து இசை முழக்கி
மக்களின் மனதைக் கவர்ந்தனர் .கி .பி .1891-ம் ஆண்டு தனது 24 -ம் வயதில் நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப் படுகிறார் .நவாப் ராஜமாணிக்கம் என்பவரால் நாடகம் ஒரு மக்கள் இலக்கியம் என்ற பொருளால்
அழைக்கப்பட்டது .மேலும் இவர் தனது நாடக மேடையினை இயங்கு உலகமாக மாற்றியமைத்தவர் என்ற பெருமையை உடையவர்

20 -ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐம்பதாண்டு காலம் தமிழ் நாடகக் கலைக்குப்
பெரும் பங்காற்றியவர்கள் தி .க.சங்கரன் ,தி.க .முத்துசாமி ,தி .க .சண்முகம் ,தி.க. பகவதி ஆகியோர் .தமிழ் மரபுவழி நாடகங்கள் சீரான வளர்ச்சியினை எட்டியபோது தி.க.சண்முகத்தின்
இராஜராஜசோழன் என்ற நாடகத்தின் மூலமும் ,நாடகக் காவலர் என அழைக்கப்பட்ட ஆர் .எஸ் .மனோகரின் "இலங்கேஸ்வரன் "என்ற நாடகத்தின் மூலமும் தமிழ் நாடகக் கலை மிகவும் பிரபலமடைந்தது .தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருந்த நாடகம் அரசியல் களத்திலும், சமூக தளத்திலும் பெரும் பங்காற்றியுள்ளது .

அதன்பிறகு பலனாடகக் குழுக்களும் ,அமெச்சூர் நாடகக் குழுக்களும் நாடகத்தை வளர்த்து வருகின்றன .இப்போதெல்லாம் நாடகங்களுக்கு
மிகப்பெரிய அளவில் கூட்டம் வருவதில்லை ,ஒரு சிலரின் நாடகங்களைத் தவிர ....! இதற்கு காரணம் தொலைக் காட்சியின் ஆதிக்கம்தான் என்பது மறக்க முடியாத உண்மை ! இப்படிப் பட்ட நிலையிலும் கிரேசி மோகன் ,எஸ் .வி .சேகர் ,y .gee . மகேந்திரன்
மற்றும் சிலர் நாடகங்களுக்கு மட்டும் அரங்கு நிரம்பி வழிகின்றன .

இப்படியான தருணத்தில் நாடகக் கலைக்காகவே
தன வாழ்நாளை அர்பணித்துக் கொண்டவரை இக்கணம் நினைவு கூறாமல் இருக்க முடியுமா ? அவர் நாடக ஆசிரியர் ,நாடக இயக்குனர் ,நாடகத் தயாரிப்பாளர் கலைமாமணி திரு .ராது அவர்கள் !
ஆடம்பரம் துளியுமின்றி எளிமையின் சிகரமாய்
நலிவுற்ற நாடகக்கலையை தூக்கி நிறுத்த தன்னாலான முயற்சிகளை சிரமேல் சுமந்தவர் ...!
சிறந்த நாடகக் கலைஞர்களையும் ,வளரும் நாடகக் கலைஞர்களையும் ஊக்குவிக்க விருதுகள் பல வழங்கி கௌரவித்தவர் ...! விருது கொடுத்து சிவந்த கரம் கொண்டவர் ...! கலை அபிமானிகளுடன் சேர்ந்து நாடகக்கலை வளர ராது அவர்கள் பட்ட பாடு மிகவும் பாராட்டத் தக்கது . நலிவுற்ற நாடகக் கலைஞர்களுக்கு பொருளுதவி செய்தவர் .நாடக வரலாற்றில் திரு .ராது அவர்களின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .நாடக கலாசாரதி , நாடககலா சிரோன்மணி , நாடக ரத்னா போன்ற விருதுகளை பெற்ற கலைமாமணி ராது அவர்கள் ....
நாடக உலகில் தான் மெழுகுவர்த்தியாய் உருகி
ஒளி பரப்பியவரை 2009-ஜூலை மாதம் காலன் தன்னிடம் அழைத்துக் கொண்டான் .

இன்று திரு ராதுவின் பணியை அவரது மகள் திருமதி ப்ரியா கிஷோர் சீரும் சிறப்புமாக செயல் படுத்தி வருகிறார் .கோடை நாடக விழா நடத்தி பல நாடகங்களுக்கு வாய்ப்பு அளித்து பல்வேறு நாடகக் கலைஞர்களை ஊக்குவித்து தந்தை பாணியில் விருதுகள் கொடுத்து வருகிறார் .

"ப்ரியமான தோழி " என்ற இலவச மாத இதழின் ஆசிரியராகவும் ,தோழி கிளப் தலைவியாகவும் உள்ள இவர் பன்முக வித்தகி .இலக்கியப் பணியோடு இறை பணியும் இரு கண்களாக கொண்டு செயலாற்றிவருகிறார் .வாரம் தோறும் வியாழக் கிழமைகளில் மயிலை சாய்பாபா கோயிலில் இவர் ஆற்றும் சொற்பொழிவைக் கேட்க வரும் கூட்டம் மிக அதிகம் ...!! இதே போல் மருந்தீஸ்வரர் கோயிலிலும் ,திருவான்மியூர் சக்கரை அம்மன் கோவிலிலும் ஆன்மிக சொற்பொழிவாற்றுகின்றார்...!

சூரியன் fm -ல் தினமும் காலை 6.45 முதல் 7 மணிவரை உன்னால் முடியும் நம்பு என்ற தலைப்பில் பேசுகிறார் .இவர்கள் குடும்பமே நாடகத் துறைக்கு தங்களால் இயன்ற பணியை தன்னலமின்றி செய்து வருவது கண்கூடு .

இன்று உலக நாடக தினத்தில் கலைமாமணிதிரு. ராது அவர்களை நினைவு கூர்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் ...!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Mar-14, 9:50 pm)
Tanglish : naadaga ulakam
பார்வை : 1775

சிறந்த கட்டுரைகள்

மேலே