நம்பிக்கையே வாழ்க்கை
கரடு முரடான மலைப்பாதை... மலைப்பாதையை கரடு முரடு எனும் அடைமொழி சேரக் காரணமாய் கூரிய வளைவுகளும், மேடு பள்ளங்களும்... வளைவிலே இரண்டு வண்டிகள் ஒரே நேரத்தில் பாதையை கடப்பதென்பது மலையிலிருந்து குதிப்பதற்கு சமம்.பேருந்தில் பயணிக்கும்போது, "விழுந்துடுவோமோ..... விழுந்தா அவ்வளவுதான்.....ச்சே..ச்சே...விழாது....." இப்படியெல்லாம் பலவாறு எண்ணங்கள் பயணிகளின் உள்மனதில் 1%விழுக்காடாவது வந்துவிட்டு செல்லும்.அப்படியொரு பாதை..... சரி....சரி....கதைக்கு வந்து விடுகிறேன்.
இந்த மாதிரியான பாதையில் இளைஞன் ஒருவனுக்கு,இரவில் பயணம் செய்யவேண்டிய நிர்பந்தம். மனித வர்க்கத்திற்கே உரித்தான ஒரு வார்த்தைதான் நிர்பந்தம். ஆம்.... காலையில் கூட்டிலுருந்து செல்லும் பறவைக்கு, மாலையில் கூடு திரும்பாமலிருக்கவும், சென்ற இடத்திலேயே தங்கி விடவும் எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை. இரவிலே தூங்காமல்,பகலைப் போல் சுற்றித்திரிய விலங்குகளுக்கு எந்த நிர்பந்தமும் ஏற்படுவதில்லை.எனவே இந்த சொல் அவைகளுக்கு சொந்தமில்லை.அதற்க்கு சொந்தக்காரன் மனிதன் மட்டுமே.
அப்படி அந்த இளைஞன் செல்லும்போது, திருப்பத்தில் ஏற்பட்ட லேசான தடுமாற்றம்., அவனை பெரிய பாதிப்புக்குள்ளாகியது. "ஆ.....அம்மா" என்று அலறியவனாய் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் மலைப்பாதையில் உருண்டான். உருண்டவன் பாதையின் ஓர தடுப்பைக் கடந்து சருகினான். அத்தனை வேகமாய் சருகும்போதும்.... வேட்டையாடும் புலி நகங்களை பதிப்பதுப்போல் கல்லின் மீதும்,மண்ணின் மீதும் விரல்களை வைத்து பதித்துக் கொண்டே உருண்டான். வாழ்க்கையில் அவன் செய்த அத்தனைப் புண்ணியங்களுக்கும் பலனாக.. கடைசியாக அவனுக்கு கிடைத்தது ஒரு சிறிய மரக்கிளை. போன உயிர் முதல் வானம் வரை சென்று திரும்பியது போல் ஒரு படபடப்பு மனதில்...எங்கிருக்கிறோம்..என்னவாகப் போகிறோம்...என்று யோசித்து பார்க்கவே முடியாத அளவுக்கு மனதிற்கும் ,கண்ணிற்கும் திரையாய் கும்மிருட்டு..திக்...திக்...திக்....இதயத்தின் துடிப்பு தெளிவாக உணர்ந்தான்.
மூன்று ஆடுகளில், பலிகொடுக்கப்பட்ட இரண்டு ஆடுகளின் துடிப்பைக்கண்ட மூன்றாவது ஆட்டின் நிலைமையிலிருந்தான் அவன்.மரண பீதி, இதுவரை கேள்விப்பட்டிருந்த வார்த்தை இப்போது நேரில். காப்பாற்றுவார் யாருமில்லையா? "காப்பாத்துங்க...காப்பாத்துங்க... "அழுகுரலுடன் ஒரு அபயக்குரல்.
திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி, "மனிதா பயப்படாதே...நான் உன்னை காப்பாற்றுகிறேன்.நீ பற்றியிருக்கும் மரக்கிளையை விட்டுவிடு".
கடுமையான தாகத்திற்கு தண்ணீரை விஷம் கலந்து கொடுத்ததைப்போல் ஒரு உணர்வு. என்ன ஆனாலும் சரி மரக்கிளையை விட மாட்டேன் என்பதாய் மனதிற்குள் ஒரு சபதம். மரண பயம்.அதிகப் பசி. மயக்கத்தின் உச்ச நிலை.. கீழே விழாமல் தடுத்திருந்தது மரண பயத்தோடு கூடிய பிடிகள். வியர்வையில் குளியல்.... இப்படியும் அப்படியுமாக இரவை விரட்டிக் கொண்டு மெல்ல கதிரவன் தன் காலை பூமியில் பதிக்க தொடங்கியதும்... முக்கால் மயக்கத்தில் கண் திறந்து பார்த்தான் எங்கிருக்கிறோம் என....
கீழே பார்த்தவனுக்கு பெருமகிழ்ச்சியுடன் கூடிய பேரதிர்ச்சி.ஆம்.. அவன் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கும் பாறையாலான ஒரு தளத்திற்கும் ஒரு முழமே இடைவெளி.
விடிந்தது பொழுது மட்டுமல்ல.அவனின் உள்ளத்தின் நம்பிக்கையும்தான்.அசரீரியின் வார்த்தைகளின் உண்மையையும், தன்னுடைய அவநம்பிக்கையினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும் எண்ணி மனம் நொந்தான்..தன் மீது தானே சினம் கொண்டான்.