பொருத்தங்கள்
பொருத்தமில்லா பொருத்தங்களைப்
பொருந்தும் எனச் சொல்லி
பொல்லாத மனிதர் பலர்
பொறுமையைச் சோதிக்கிறார்.
மனப் பொருத்தம் நிறப் பொருத்தம்
குணப் பொருத்தம் அத்தோடு
இனப் பொருத்தம் இன்றேல்
இன்னல் வரும் என்கிறார்.
மதப் பொருத்தம் வீழ்ந்தாலும்
நிதிப் பொருத்தம் தாழ்ந்தாலும்
பொருத்திடலாமென மணவறையில்
போலிகளை நிறுத்திடுவார்.
எழுத்து வகை அத்தனையில்
உயிரெல்லாம் ஆண்பாலாம்
உயிர்மெய்கள் பெண்பாலாம்
பாட்டியலில் பயின்றிடுவார்.
குற்றெழுத்து ஆண்பாலாம்
நெட்டெழுத்து பெண்பாலாம்
செய்யுட்கண் முதற்சீர்க்கும்
பாட்டுடைத் தலைவனுக்கும்
பொருந்திய பயன் கூறும்
பொருத்தங்கள் பத்தென்று
பிங்கலந்தை முதலான
பொருத்தவியல் பறைசாற்ற
இந்த வகை இலக்கணத்தை
தலைகீழாய் உயிர்கட்கு
பொருத்தி நாம் பார்க்கின்றோம்
பொருந்துமோ அப்பொருத்தம்!.