கற்றேன் ஆயிரம்
கற்றேன் ஆயிரம்
நல்லவை காட்டினாய்
தீயவை கூட்டினாய்.
இங்கு
அன்பு காட்ட ஆளில்லை
ஆளுகொரு பக்கம்.
பரிவு காட்ட ஆளில்லை
பரபரப்பில் அனைவரும்.
விழுந்து கிடப்பவனை
தூக்கவும் கையில்லை,
விருந்து படைக்க
வீட்டிலும் ஆளில்லை.
வேலை கிடைத்தது
அவனுக்கு மட்டுமல்ல,
அவன் கைகளுக்கும்தான்
கைப்பேசியால்.
கூக்குரலிட்டாலும்
கூடுவதற்கு நாதியில்லை.
இங்கு
"இயர் போன்"
மாட்டிகொண்டு அலையும்
கூட்டமே அதிகம்.
ஏன் வாழ்கிறோம்
என்று தெரியாமலேயே
வாழும் கூட்டம்.
மன்னிக்கவும் சொற்பிழை,
"வசிக்கும் கூட்டம்".
அவசர அவசரமாய்
அலாரம் சத்தத்தில் எழுந்து,
குக்கர் விசிலில் சமைத்து,
வாகனங்களின் அலறலில்
வாழும் அனாதை கூட்டம்.
இங்கு
பேருந்தில் நிற்கவும் இடமில்லை,
பேசுவதற்கு மனிதனும் இல்லை.
"யாவரும் கேளீர்"
என்ற எண்ணம் மாறியது.
இங்கு
தெரிந்தவன் கூட
யாரோ போல் போகிறான்.
பிறரோடு பேசக்கூட
நேரம் இல்லதவர்களை போல்
பிதற்றுபவர்களின் மத்தியில்,
நீ கடைகளின் முன்
நிறுத்தப்பட்ட உயிரில்லா
பொம்மையே.
பெற்றோரயும் சுற்றோரயும்
மறந்து,
உயிரைக்கொடுத்து
உன்னையே நீ அழித்து,
நாள் முழுதும்
உழைத்து,
இளைத்து,
களைத்து,
பேனா நுனியில் மைபோல்
கரைவது ஏன்?
அப்பரைசலுக்கும்
அப்ரிசியேசனுக்குமா?
உன்
வறுமையை தனிக்க
உரிமையை இழக்க வேண்டுமா?
ஈடு இணையில்லா
நம் தமிழின பண்பாடு
இழிவு படும்
அவநிலையும் இங்கேதான்
அரங்கேற்றப்படுகிறது.
இடியோசை
இனிதாய் மாறினாலும்
இங்கு
இன்டெர்நெட் தாக்கம்
குறையாது.
கானல் நீரே
தாகம் தீர்த்தாலும்
இங்கு
காசு இல்லாமல்
தண்ணீர் கூட கிடைக்காது.
இங்கு
உன் பணவரவு அதிகம்
ஒத்துகொள்கிறேன்,
ஆனால்
உன்
வரவுக்கு அதிகமான செலவு வாழ்க்கையில்
பணத்திற்கும்
பரபரப்பிற்கும் இடமளிக்கும் நீ
பாசத்திற்கும்
பந்தத்திற்கும் இடமளிக்க
மறுத்துவிடாதே
மறந்துவிடாதே.
எண்ணி பார்க்கும்போதே
எமனிடம் அகபட்டாற் போல்
உள்ளது.
ஐய்யோ !!
உணர்ந்து பார்க்க
ஒரு நொடியும்
தயாராய் இல்லை.
நம்
நாகரீகதிற்கும்
கலாச்சாரத்திற்கும்
ஏற்பட்ட சாபத்திற்கு,
இந்த நகரமே சாட்சி.
மன்னிக்கவும் எழுத்து பிழை
இந்த நரகமே சாட்சி.
- சென்னை !!