ஏப்ரல் 1

ஏப்ரல் 1

சிறப்பாகத்தான் இருக்கிறது
நம்மை நாமே கொண்டாடி
முட்டாளாக்கிக் கொள்(ல்)வதும்..

கடவுள் உண்டு இல்லையெனும்
சர்ச்சைக்குத் தீர்வின்றி
வருடந்தோறும் ஆன்மீகப்பண்டிகை
வாழ்த்துப் பரிமாற்றத்தில்
கருத்து வேறுபாடற்ற இணைகோடுகளாய்
ஆத்திகரும் நாத்திகரும்...

ஐந்தாண்டுக்கொருமுறை வரும்
தேர்தல் திருவிழா
நிமிடத்திற்கொரு முறையென
நடத்தப்பட வேண்டிய சூழல்
சாபக்கேடு வந்தாலும்
நல்மாற்றம் வருமென்ற எதிர்பார்ப்பில்
போட்டிக் களத்தில் நிற்போரின்
அகம் மறைத்த தேனொழுகு சொல்
போலி வாக்குறுதிகளை நம்பி
தலைமையைத் தேர்ந்தெடுக்கும்
கள்ள ஓட்டெனும் கள்ளனும்
பிறப்புரிமையாய் மதிக்கும் வாக்குரிமையாளனும்..

ஒன்றில் இல்லையெனில் மற்றொன்றில்
கருத்தொருமித்து வாழ்ந்திடலாமென
அசட்டு தைரியத்தில்
சூடிய மாலை வாடுமுன்னே
விவாகம் ரத்தாகத் துடிப்போர்
வழக்குகளை ஏற்றுக் கொள்ளும்
சட்ட வல்லுநர்களும்
மறுவிவாகத்தில் நுழைவோரும்...

ஒவ்வொரு நொடியும்
நிழலாய்த் தொடரும்
முட்டாள்தனமான செயலை
நற்பண்பு உளியால் செதுக்கி
முழு பகுத்தறிவு மனிதச்சிலையாய்
உலவிட உறுதி கொள் மனமேயென்று
வருடந்தோறும் ஏப்ரல் 1...
வாழ்த்துரைத்தலும் முட்டாளாக்கி விளையாடுதலும்..

சிறப்பாகத்தான் இருக்கிறது
நம்மை நாமே கொண்டாடி
முட்டாளாக்கிக் கொள்(ல்)வதும்...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (1-Apr-14, 8:24 pm)
பார்வை : 71

மேலே