===+++புழுதிகாட்டுப் பொழப்பு+++===
அது ஒரு நிறைந்த ஆடிப்பருவம். கிராமத்தில் இருந்தவர்களெல்லாம் காடுகளில் பரபரப்பாக காணப்பட்டார்கள். முற்றும் முழுதாக விவசாயத்தையே தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்ட அந்த கிராமத்து மக்களுக்கு, ஆடிமழை சரியான தருணத்தில் பெய்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி மனதில் குடிகொண்டுவிடும். மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், நலிவடைந்து கிடந்த அந்த கிராமத்து மக்களுக்கு, இந்த ஆண்டு பருவமழை தேவையான நேரத்தில் சரியாக பெய்துவிட்டதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள். ''இந்த ஆண்டு தங்களின் வறுமை கொஞ்சமாவது தீரும் என்ற நம்பிக்கை, அவர்களின் மனதில் முட்டி மூண்டு முளைத்திருந்தது.'' இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைக்க வேண்டுமெனில், அது அந்த வானத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்...! அவர்கள் எப்பொழுதும் வானத்தை நம்பி மட்டுமே தங்களது முழு வாழ்க்கையையும், கட்டமைத்து வைத்து இருக்கிறார்கள், அதனால்தான் என்னவோ .., அந்த வானத்தைபோலவே அவர்களின் வாழ்க்கையும்கூட இன்னும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறதோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.
அவரவர்களும் தங்கள் நிலத்தில் விதை விதைக்கும் வேளையில் முனைப்புடன் இருந்தார்கள். அய்யாசாமி தனது ஒரு ஏக்கர் நிலத்தில், விதை புட்டியில் இருந்து வரகை அள்ளி வேக வேகமாக விதைத்துக்கொண்டு இருந்தார். விதைத்து முடித்ததும் மாடுகளை நுகத்தடியில் பிணைத்து நிலத்தை உழத்தொடங்கினார், அவரது மனதில் ஒரு வேகம் இருந்தது.
ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு ஏர் உழுதால் மூன்று மணி அல்லது நான்கு மணிக்கு உழுது முடித்துவிடலாம். ஆனால், அய்யாசாமியிடம் அவரது ஒரு ஏர் மட்டுமே இருந்தது, ஆகையால் அவரால் வேகமாக செயல்பட்டால்தான், அதுவும் இரவுவரை உழுதால்தான் அந்த ஒரு ஏக்கரை உழுது முடிக்க முடியும், அதோடில்லை..., மற்ற விதைகளை விதைத்தால் ஒரு சால் உழவு உழுதாலே போதும், ஆனால் வரகு, கம்பு, திணை போன்ற உருவில் சிறிய விதிகளை விதைக்கும்பொழுது இரண்டு சால் உழவு உழவேண்டி இருக்கிறது. அதாவது மருசால் உழவும் உழவேண்டும். இன்னும் விளக்கமாக கூறினால் முதலில் உழுது பிறகு அந்த உழவை புரட்டி உழுவதாகும், இது எதற்கு என்றால் சிறிய விதைகள் ஒரு சால் உழுதவுடன் பூமியின் ஆழத்திற்குச் சென்றுவிடும், அதனால் அதிகமான் ஆழத்தில் கிடக்கும் அந்தவிதை மண்பாரம் தாங்காமல், மண்ணிற்கு உள்ளேயே மரித்துப்போய்விடுவதோடு, அந்த விதையால் முட்டி முளைத்து மூண்டெழுந்து வெளியே தலைகாட்ட இயலாமல் போய்விடும். எனவே மருசால் உழவாக புரட்டி உழுதால், விதை மண்ணின் மேல்பரப்பிற்கு சிறிது ஆழத்திற்குள் நிலைகொண்டு, எளிதாக முளைத்து எழுந்து வளர்ந்துவிடும். அதனால்தான் மருசால் உழவின் அவசியத்தை உழவர்களின் இலக்கணம் தெளிவாக நமக்கு உரைக்கிறது.
அய்யாசாமி உற்சாகமாகவும் வேகமாகவும் உழுதுகொண்டு இருந்தார்.
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போல...!
----------குறுந்தொகை.
ஒரே ஒரு ஏர் வைத்திருக்கும் உழவன், மண்ணின் ஈரம் புலர்ந்து போவதற்குள் தனது நிலத்தை எவ்வளவு துடிப்புடன் வேகமாக உழுவானோ... அதைப்போல அய்யாசாமி மேலே கூறப்பட்டுள்ள குறுந்தொகை பாடலுக்கு ஏற்றார்போல செயல்பட்டுக்கொண்டு இருந்தார்,
இன்று எப்படியும் ஒருசால் உழுதுவிட்டால் நாளை மருசால் உழுதுவிடலாம் என்பது அவரின் கணிப்பாகும்.
அய்யாசாமி இன்று முழுதும் மாட்டிற்கு பின்னே நடந்தாலும் அசந்து போகமாட்டார், அவரது மனது அவரை சோர்வடையவிடாது, ஆனால் எருதுகள் இரண்டும் அசராமல் இருக்க வேண்டும் அல்லவா? அதனால கலப்பையின் மேழியை மிகுந்த அழுத்தம் தராமல் கொஞ்சம் சாதாரணமாகவே பிடித்துக்கொண்டார்.
மாடுகள் அவர் எதிர்பார்த்ததைபோல் நடந்துகொண்டு இருந்தன. காரிக்காளைக்கு நான்கு பல்லு கடை முளைப்பு, ஆனால் செவளைகாளைக்கு சரியாக ஆறுபல்லு, காரி எதற்கும் அஞ்சாது, எத்தனை பாரம் என்றாலும் முண்டி இழுத்துவிடும். செவள கொஞ்சம் நிதானமாகவேதான் செயல்படும் ஆனாலும் அதுவும் அசந்துவிடாது.
எதிலும் கொஞ்சம் மூர்க்கத்தனமாக செயல்பட துடிக்கும் காரியின் செயல்பாட்டிற்கு முதலில் இணங்கிச் செல்ல முரண்டு பிடித்தாலும் பிறகு அதன் இழுப்பிற்கு இணங்கிச் சென்றுவிடுவது செவளையின் வழக்கம்.
அய்யாசாமி மிக வேகமாக மாடுகளை தட்டி ஓட்டி நிலத்தை உழுதுகொண்டு இருந்தார், ஏழ்மையான விவசாயக்குடும்பத்தில் பிறந்த அவருக்கு இருக்கிற சொத்து, இந்த ஒருஏக்கர் வானம் பார்த்த பூமியும், ஒரு சிறு குடிசைவீடும், இந்த எருதுகளும்தான் வேறொன்றுமில்லை. மனைவியும் வயதிற்கு வந்த ஒரு மகளும் அவருக்கு இருந்தார்கள். தினம் தினம் உழைத்துத்தான் தன் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த ஒரு ஏக்கர் நிலம் நன்றாக விளைந்தால் அவரின் குடும்ப பசி ஓரளவுக்கு தீரும் என்பதுதான் உண்மை.
பக்கத்து நிலத்து மருதை மகன் மாரிமுத்து விதை புட்டியில் இருந்து விதையை அள்ளி வேக வேகமாக வித்தைத்துக்கொண்டு இருந்தான்,
அதை கண்ட அய்யாசாமி, யப்பா... மாரிமுத்து...! என்னப்பா வெதைக்கிற...? என்றார்.
சோளம் வெதைக்கிறேன் பெரியப்பா...! என்றான் மாரிமுத்து.
அப்படியா....? ''அதுசரி.'' அப்பா வருலியா...?
இல்ல பெரியப்பா..., ராத்திரியெல்லாம் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியல, ஒரே இருமலும் காச்சலுமா இருந்துச்சி, அதான் வரவேண்டாம் வூட்ல இருன்னு சொல்லிபுட்டேன்.
''அட பாவமே...,'' வெதப்பு நாளும் அதுமா, இப்பவா ஒடம்பு முடியாம போகணும்; ''சரிப்பா,'' பாத்து பதனமா செய், தெற்கு வடக்குல ஒழவு ஓட்டு, அப்போதான் மழ கிழ பேஞ்சா மேலகாட்டுல இருந்து வர வெள்ளத்த முடிஞ்சவரைக்கும் மண்னரிப்பு வராம ஒழவு சாலு தடுக்கும் பாரு...
ம்ம், சரி பெரியப்பா..........என்று தலையாட்டியவாறே மாரிமுத்து வடக்கயிறை ஏர் கால்தடியில் பிணைத்து கொண்டு இருந்தான்.
பண்ணைய கொஞ்சம் இழுத்து வச்சி கட்டிக்கோ, விட்டு கட்டுனா மாடு அசந்துபோயிடும். என்று கூறியவாறே, மீண்டும் மாட்டை தட்டி நகர்த்திக்கொண்டு இருந்தார் அய்யாசாமி. மண் குமிழ் குமிழாக இருபுறமும் அழகாக வெளியேறிக்கொண்டு இருக்க அப்போ அப்போ மேழியை கொஞ்சம் மேலே தூக்கி குழவில் உள்ள மண்ணை தன் கையிலுள்ள தார்குச்சியால் நீக்கும்போதே அது ஒரு தனிய அழகாகவே தெரிந்தது.
இப்படியே அய்யாசாமி தனது வேலையை வேகமாக செய்துகொண்டு இருந்தார், ஒரு விலா தேய்வதற்கும், அடுத்த விலாவை மிக நேர்த்தியாக கோலி தனது உழவு வேலையை அதன் இலக்கணத்தோடு சரியாக செய்துகொண்டு இருந்தார். சூரியன் உச்சந்தலைக்கு மேலே நேராக நின்று பூமியை தன் சுடு விழிகாளால் முறைத்துக்கொண்டு இருந்தான்.
சும்மாடு கோலிய தலையில் ஒரு தட்டுகூடையை சுமந்து வந்த முருவாயி, வேப்பமரத்து நிழலில் யார் உதவியுமின்றி தானே தலையிலிருந்த கூடையை இறக்கி வைத்ததுமே,
உச்சிநேரமே தாண்ட போகுது வெசையா வந்து கஞ்சி குடிச்சிட்டு போய்யா என்று அய்யாசாமியை அழைத்தாள்.
உச்சி வெயில் நேரம்தான், அய்யாசாமிக்கும் நல்லப் பசி, எருதுகளும் சோர்ந்து போயிருந்தன, உடனே ஏரை நிறுத்தி, நுகத்தடியில் பிணைத்திருந்த மாட்டின் பூட்டாங்கயிறை தறித்துவிட்டு, மாட்டை ஓட்டிக்கொண்டு சென்றார்.
ஏன்ய்யா, வந்து கஞ்சிகுடிக்காம மாட்டை எங்க ஓட்டிகிட்டுப் போற,,, என்று முருவாயி கேட்க.
பொறு வாரேன், காட்டுவாறியில மாட்டுக்கு தண்ணிகாட்டி ஓட்டிகிட்டு வாரேன், மாடு அசந்துபோகாம இருந்தாதான் நம்ம பொழப்பு நடக்கும், என்றவாரே மாட்டை ஓட்டிச்சென்றார்.
அந்த எருதுகளின் மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார், தான் உணவு உட்கொள்ளும் முன்பு எருதுகளுக்கு தண்ணீர் காட்டி, தீனி கொடுத்துவிட்டுதான் எப்பொழுதும் உணவருந்துவார். ஏன்தான் இந்த மாட்டுமேல இத்தன பாசமா இருக்கியோ என்று எத்தனையோ வட்டம் முருவாயி கூறி இருக்கிறாள்.
மாடுன்னு சாதாரணமா பாக்காத புள்ள, நம்மள மாதிரி அதுவும் ஒரு உசிருதானே, நம்மளவிட நமக்காக அதிகமா வேலை செய்யுறதே அந்த மாடுங்கதான், அதுக்குமட்டும் பசிக்காதா என்ன?, அந்த மாடுங்க நல்லா இருந்தாதான் நமக்கு சோறு, அத மொதல்ல தெரிஞ்சிக்கோ. அதோட பசியத்தான் நாம மொதல்ல தீக்கணும், அப்போதான் நாம சாப்ட முடியும், - முருவாயியின் கேள்விக்கு அவர் எப்பொழுதும் கூறும் பதில் என்று பார்த்தால் இதுதான், -
தண்ணி காட்டி வரப்பில் உள்ள காவட்டம் புல்லில் எருதுகளை மேயவிட்டுவிட்டு, வேப்ப மரத்தடிக்கு வந்து தனது மனைவி முருவாயி கொடுத்த பழைய கஞ்சியை பச்ச மிளகாய் கடித்துக்கொண்டு, வேக வேகமாக குடித்து முடித்தார்.
மாடு சிறிது நேரம் மேய வேண்டும் என்பதற்காக அய்யாசாமி சிறிது நேரம் வேப்பமர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் மாடுகளை கலப்பையின் நுகத்தடியில் பிணைத்து நிலத்தை உழத் தொடங்கினார்.
உழாமல் கிடந்த பக்கத்து நிலத்தில் முளைத்து கிடந்த, தொசி கீரையையும், பண்ணக் கீரையையும், பசலைக்கீரையையும், ராத்திருக்கு சமைக்க ஆகுமே என்று பறித்துகொண்டு இருந்த முருவாயி...! ஏன்யா இன்னும் செத்த நேரம் ஓய்வெடுத்துக்க கூடாதா, அதுக்குள்ளே கையும் காலும் பச பசன்னு அலையுதாக்கும், என்று தன் கணவர் அய்யாசாமியை பார்த்து கூற...
ஆமாம்... ஆமாம்...! ஓய்வு எடுக்குறாங்க ஓய்வு...! அதுதான் இப்போ ரொம்ப முக்கியம் பாரு, இன்னைக்கு மொத சாலு ஓட்டி முடிச்சாதான் நாளைக்கு மறு சாலு ஓட்ட முடியும், திடீர் திப்புன்னு மழை பூந்து அடிச்சிடுச்சினா என்னடா சாமி பண்றதுன்னு நானே நெகா புரியாம இருக்கேன், இதுல ஓய்வு எடுக்கணுமாம்... ஓய்வு...! பேசாம வேலைய பார்ப்பியா.... என்று முணுமுணுத்து கூறியவாறே மாட்டை தட்டி நகர்த்திக்கொண்டு இருந்தார் அய்யாசாமி.
அய்யாசாமி உழவுத்தொழிலை தன் உயிராக கருதுபவர், அதுமட்டுமில்லை அவருக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம்தான், நிலத்தை பார்த்து கடவுளாக பாவித்து கையெடுத்து கும்பிட்டு வணங்ககூடியவர். இந்த உலகிற்கே சோறு போடுகிறவன் விவசாயிதான், விவசாயம் இல்லை என்றால் இந்த உலகமில்லை, விவசாயி இல்லையென்றால் இந்த உலகத்தில் உயிர்கள் இல்லை என்று வியாக்கியானம் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனது நிலத்தின் வேலையை செய்ய அவருக்கு எப்பொழுதும் அசதி வந்ததில்லை. நிலத்து வேலை என்றால் மிகவும் சுறுசுறுப்பு ஆகிவிடுவார். வேலையை திருத்தமாகவும் மிக திறமையாகவும், இயற்க்கைக்கு ஏற்றாற்போல் திட்டமிட்டும் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். அவரது ஆலோசனைக்கு ஏற்ப ஊரில் நிறையப்பேர் விதைப்பது வழக்கம். விவசாயத்தைப் பற்றி யார் குறை சொன்னாலும் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி குறைசொன்னால் யாரா இருந்தாலும், பொங்கியெழுந்து பொருந்துதள்ளிவிடுவார் இந்த மனுசன்னா பார்த்துகங்களேன்.
இரவு நேரம் எட்டு மணி,
அய்யாசாமி காயிற்று கட்டிலில் மல்லாக்க படுத்து விழித்துக்கொண்டு இருந்தார், கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் ஓரம் கிழிந்த ஈச்சம்பாயில் முருவாயியும் மகளும் படுத்து இருந்தார்கள்.
வானம் இருண்டு கிடந்தது. வெண்ணிலவையும் விண்மீன்களையும் காணவில்லை. பளிச் பளிசென்ற மின்னல் அப்போ அப்போ வந்து கண்ணை துளைத்துக்கொண்டு இருந்தது. தூரத்து மேற்குவான் உச்சியில் இடி உர்.. உர்.. என்று உருமிக்கொண்டும், கட கடவென எங்கேயோ தூரத்தில் நகர்ந்துகொண்டும் இருந்தது. அய்யாசாமிக்கு வயிற்றில் புளிகரைத்தது.
ஐயோ மழை வரபோகிறதே, நிலத்தில் போட்ட விதைகளெல்லாம் வெள்ளத்தில் போய்விட்டால் என்ன பண்ணுவேன் என்று அவரது அடிமனது அழுது புலம்பிக்கொண்டு இருந்த அதே நேரம், வானம் திடீரென கத்தி கதறி அழுதது.
அத்திகட்டி ஆலங்கட்டி மழை, கொட்டு கொட்டென்று கொட்டியது. ''முன்பு தூரத்தில் உறுமிக்கொண்டு இருந்த இடி இப்பொழுது பக்கத்தில் வந்து பயங்கரமாக வெடித்து காதை கிழித்தது, மனதை உடைத்தது.'' பளிச் பளிச்சென வந்த மின்னல் அதிகபச்ச மின்சாரத்தை கண்களில் பீய்ச்சி அடித்தது. படுத்துகிடந்த அய்யாசாமி எழுந்து அமர்ந்துகொண்டார்.
இடிக்கிற ஒவ்வொரு இடிக்கும் இடிந்துகொண்டு இருந்தது அவரது இதயம். சிறிது நேரத்தில் கூரையின் ஓட்டை வழியாக மழை ஒழுகத்தொடங்கியது, முருவாயியும் அவளது மகளும் எழுந்துகொண்டார்கள், இருக்கிற பாத்திரங்களை எடுத்து ஒழுகிற இடங்களில் வைத்தார்கள், மழை மேலும் வலுத்தது. இருபத்தொரு மழையும் எண்ணியடித்தது, கூரையின் ஓட்டை வழியாக் ஒழுகும் நீர் பாத்திரத்தை நிறைக்க நிறைக்க முருவாயியும் அவளது மகளும் அதை எடுத்து வெளியே ஊற்றிவிட்டு மீண்டும் மீண்டும் ஒழுகும் இடங்களில் வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
ஐயோ.... எல்லாம் போச்சே.....! என்ன பண்றதுன்னு தெரியலையே, இந்த வருசமாச்சும் வெளையுமுன்னு நெனச்சேன், அதுலவும் மண்ணு விழுந்துடுச்சே..., என்று குரலை உதிர்த்துவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் தலையில் கைவைத்துக்கொண்டார் அய்யாசாமி.
ஏன்யா... இன்னும் இழக்க நம்மகிட்ட என்னதான் இருக்கு? வச்சி இருக்க ஒரு பொம்பளப்புள்ளைய எப்படி கரசேக்க போறோம், அதுக்குன்னு என்னத்த வச்சி இருக்கோம். இந்த மானத்த நம்பி இந்த மண்ண நம்பி எப்படி வாழப்போறோம்?, வேண்டான்ய்யா, எங்கயாச்சும் போய்டுவோம். பட்டணம் போயி எதாச்சும் வேல செஞ்சி பொழச்சிக்குவோம், இந்த வெவசாயமெல்லாம் நமக்கு வேண்டான்ய்யா என்றாள் முருவாயி.
இத பாரு புள்ள வெவசாயத்தபத்தி கொற சொல்லாத. ''இந்த மானம் பேயவேண்டிய நேரத்துல காயுது, காய வேண்டிய நேரத்துல பேயுது அதான் இப்படி எல்லாம் ஆகுது; இதுக்கு என்ன பண்ண சொல்ற...?.'' ''வெவசாயத்தையே உட்டுடுன்னு சொன்னா எப்புடி?.'' ''இந்த ஒலகத்துல அவன் அவனும் வெவசாயத்த உட்டுபுட்டா அப்புறம் எப்புடி சாப்புடுவானுவு..?'' ''அரிசி என்னா மானத்த பொத்துக்கிட்டு கொட்டுமா?'' ''இல்ல அரிசியையும், பருப்பையும், இரும்பு தங்கம் தயாரிக்கிரமாதிரி விஞ்ஞான மொறையில தயாரிச்சி சாப்புடுவானுவுளா...?'' ''இல்ல பணம் காசத்தான் திம்பானுவுளா...?'' ''வெவசாயம் செய்யலனா இந்த ஒலகத்துல ஒருத்தனும் உசிரு வாழமுடியாது தெரிஞ்சிக்கோ''. வெவசாயத்த தவர எனக்கு வேற என்னடி வேலத்தெரியும்? என்னய பட்டணத்துல போயி பிச்ச எடுக்க சொல்றியா?. பிச்சை எடுத்தாக்கூட, கைக்காலு நல்லாத்தானே இருக்குனு நெனச்சி ஒருத்தனும் ஒருவா போடமாட்டான், என்று புலம்பினார் அய்யாசாமி.
இந்த வருசம் வெளையும் அடுத்த வருசம் வெளையுமின்னு, நாமளும் வருச வருசமா காத்துகெடக்குறோம், ''வூட்ல இருந்த பித்தள சாமான் மொத கொண்டு அத்தனையும் அடகு வச்சி முழுகிபோச்சி.'' இதுக்குமேல என்ன பண்ண போறோம். பொட்டபுள்ள ஒன்னு பெத்து வச்சி இருக்கமே அத எப்புடி வாழ வக்க போறோம்?. ''வெவசாயத்த தவர வேற வேல தெரியாதுனா நாம எப்படித்தான் கொற காலத்த கழிக்கிறதாம்?.'' ஊரெல்லாம் கடன் வாங்கி வயித்து குழில போட்டாச்சி. இனி ஒருத்தர்கிட்டவும் கையேந்த முடியாது. இப்ப சாவுரத தவர வேற என்ன வழியிருக்கு என்று புலம்பிய முருவாயி, எம்பொழப்பு இப்படியாகி போச்சே என்று அழுதாள்.
நீ மொதல்ல பொலம்புறத நிறுத்த போறியா இல்லையா?, மேல மேல பேசின அப்புறம் என்ன பண்ணுவன்னு தெரியாது என்று கோபத்தோடு அய்யாசாமி கூற...உடனே முருவாயி தன் வாயை மூடிக்கொண்டாள்.
அவர்கள் பேசியதெல்லாம் சலசலவென்று கொட்டுகிற மழையின் சத்தத்தில் கரைந்து போயிருந்தது, தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மழை கொஞ்சமும் குறையவே இல்லை, அய்யாசாமி வயிற்றில் எரிந்த தீயும் குறையவில்லை.
அதிகாலை நேரம்,
கண்ணீர் மல்க தனது நிலத்தை வெறித்துக்கொண்டு இருந்தார் அய்யாசாமி. மேல காட்டில் இருந்து வந்த பெரும்காட்டு வெள்ளம், கிட்டத்தட்ட நான்கு ஐந்து பர்லாங்கிற்கு மேல் உள்ள நிலங்களை நாசம் செய்து, மண்ணை அறுத்து விதைகளை எல்லாம், வாறி வழியாக அடித்துச்சென்றிருந்தது. அய்யாசாமி நிலத்திலும் மண்ணெல்லாம் போய்விட்டது விதை எங்கே இருக்க போகிறது, பல பேரோட நிலத்திலும் வெள்ளம் தனது கைவரிசையை காட்டி இருந்தது.
அய்யாசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அழக்கூட அவர் சக்தி இல்லாமல் இருந்தார். இந்த வருடம் எப்படியும் விளையும், அதை வைத்து இருக்கிற கடன்களை எல்லாம் தீர்த்துவிடலாம் என்ற அவரது எண்ணம் இப்படி பாழாகிவிட்டதே. எல்லா விவசாயிகளுமே அழுது புலம்பிக்கொண்டுதான் இருந்தார்கள், சில விவசாயிகள் மீண்டும் விதை வாங்கிவந்து மறுபடியும் விதைப்பதற்கு முனைந்துகொண்டு இருந்தார்கள்.
அய்யாசாமி தளர்ந்த நடையோடு நடந்துகொண்டு இருந்தார். மீண்டும் விதைவாங்க கையில் பணம் இல்லையே என்ன செய்வது, யாரிடம் கேட்பது, இந்த சூழலில் யாரிடம் கேட்டாலும் எதுவும் கிடைக்காதே. அவரது மனம் வேதனையில் விம்மி வெடித்துவிடும்போல் இருந்தது. நுரையீரல் சுவாசப்பை கணத்தது. மூச்சு காற்றின் பயணம் திணறலில் இருந்தது. ஐயோ,,, என்று வாய்விட்டுக் கதற வேண்டும்போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் முடியவில்லை. நடையில் ஒரு தள்ளாட்டத்தோடு நடந்துகொண்டு இருந்தார்.
ஏன்யா,,, காலங்காத்தால காட்டுக்கு போயிட்டியாக்கும். அந்த வயித்தெரிச்சல ஏன்யா போய் பாத்த...?. சரி சரி... கை கால அலம்பிகிட்டு வந்து கஞ்சிகுடி என்று முருவாயி சொல்ல. வேண்டாமென்று மறுத்துவிட்டார், அவர் மனம் முழுக்க பாரம், தாங்க முடியாத துயரம், விவசாயத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிற விவசாயின் பிழைப்பு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொள்வது மாபெரும் கொடுமை அல்லவா.
விவசாயத்தை மட்டுமே தனது உயிர் மூச்சாக சுவாசித்துக் கொண்டு, விவசாயத்தை தவிர வேறு வேலை எதுவுமே தெரியாதவர்கள் அய்யாசாமியைப்போல பலர் எப்படி இந்த உலகில் வாழ்வது? கேள்விக்குறி மட்டுமே நமக்கும் பதிலாக இருக்கிறது.
எப்பொழுதும் இளைஞனைப் போல் சுறு சுறுப்பாக இயங்கிகொண்டு, ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கும் அய்யாசாமி, மனமுடைந்து கட்டிலில் சுருண்டு கிடந்தார், பம்பரமாய் சுழன்றே பழக்கப்பட்ட அவர் ஒரு நாளும் இப்படி முடங்கியதில்லை. அவரது மனம் வேதனையின் உச்சத்தில் வெம்பிக்கொண்டு இருந்தது.
என்னயா... எழுந்திருய்யா...! அய்யாசாமி இப்படி கட்டிலில் கிடப்பதை கண்ட முருவாயி அவரை குரல்கொடுத்து எழுப்பினாள்,
அவர் எந்த சலனமும் இன்றி அப்படியே படுத்திருந்தார்.
கட்டிலுக்கு அருகில் சென்ற முருவாயி, கட்டிலில் அமர்ந்து அவர் தலையை மெல்ல தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு, கைகளால் அவரை சீண்டி எழுப்பினாள்.
இங்கபாருய்யா... கூப்டுறேன் இல்ல... எழுந்திருய்யா...
ம்ம்...! என்ற ஒரு வார்த்தை மட்டும் அவரிடமிருந்து பதிலாக வந்தது.
என்னய்யா இது, ஒரு நாளும் பகல் நேரத்துல படுக்கமாட்டியே.., மொதல்ல எழுந்திருய்யா என்றாள் ஆதரவாய் அவர் தலையை கோதிவிட்டவாரே.
அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை, முருவாயி மடியில் தலைவைத்தவாரே மோட்டுவளையை முறைத்துக்கொண்டு இருந்தார்.
''இந்தாய்யா.. இத வச்சி வெத வாங்கிட்டு வா. திரும்ப வெதைக்கிலாம், என்று கூறியவாரே தனது கழுத்திலிருந்த தாலியை கழட்டி அவர் கைகளில் வைத்தாள் முருவாயி.'' இதை சிறிதும் எதிர்பார்க்காத அய்யாசாமி சட்டென கட்டிலில் இருந்து எழுந்து, முருவாயி என்ன இது? மிஞ்சி இருக்குறதே இது ஒன்னுதான், இதையும் எழக்கனுமா...?. தயவு செஞ்சி கழுத்துல போட்டுக்க புள்ள என்றார் பதை பதைக்கும் மனதோடு.
ஏன்யா இதுக்குபோயி பதறுற...?. எங்க அப்பன் வீட்ல இருந்து நான் கட்டுன சீலையோட வந்தேன், இதுவரைக்கும் என்ன கண் கலங்கவிடாம ராணிமாதிரி பாத்துக்குறியே, ஒன்னவிட இந்த தாலி முக்கியமா?. எனக்கு ஒரு மஞ்ச கயிறு போதும்ய்யா, நீ இப்படி கட்டுலுல சுருண்டு கிடக்குறத என்னால தாங்க முடியலய்யா. இந்த வருசம் நல்ல வெளையுமுன்னு எனக்கும் தோணுது. மண்ண நம்பியே உசுரு வாழுர ஒன்னோட ஒழைப்பு நம்மள காப்பாத்தும், நீ மொதல்ல போ..! போய் இத அடகுவச்சி வெத வாங்கிட்டு வா என்று தாலியை அவர் கையில் திணித்தாள்.
தன் மனைவியை பெருமையோடும், மிகுந்த அன்போடும் பார்த்த அய்யாசாமி. முருவாயி... ஒன்னோட பாசம் எனக்கு தெம்பு குடுத்துடுச்சி புள்ள..., நான் தவிக்கிற நேரத்துல தாய்போல இருந்து, சரியான வழிகாட்ட ஒன்னால மட்டும்தாண்டி முடியும், என்றவாறே மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் நா தழு தழுத்தது, அவரது கண்கள் உடைந்து தாரை தாரையாக நீர் கொட்டியது,
இதைகண்ட முருவாயி, என்னய்யா இது, எதுக்கும் அஞ்சாத நீ இதுக்குபோய் அழுலாமா....? என்றவாறே தன் முந்தானை எடுத்து அவர் கண்ணீரைத் துடைக்க, அப்படியே தன் மனைவி முருவாயியை இறுக்கி கட்டிக்கொண்டார் அய்யாசாமி.
இவற்றை எல்லாம் கண்ணீர் மல்க பார்த்துகொண்டு இருந்தாள். அவர்களின் ஒரே மகள் மட்டுவார்க்குழலி.
********************* முற்றும் ********************
---------------நிலாசூரியன்.