ஏர் பிடித்த என்வாழ்வு

ஏர் பிடித்த என் வாழ்வு
ஏற்ற மேதும்காணவில்ல...
மனந் தவிக்கும் என்வாழ்வில்
மாற்ற மேதும் நிகழவில்ல....
உழைப் பென்னும் விதை போட்டு
வியர்வை என்னும் நீர் பாய்ச்சி
நம்பிக்கை உரம் போட்டென்...
மாரி பொய்த்து போச்சு
போரும் வத்திபோச்சு
வட்டி பணம் குட்டிப் போட்டு
வம்படியாய் வளர்ந்து நிற்க
முதலுக்கே மோசாமாச்சு
மகசூலும் சுருங்கிப் போச்சு....
கந்து வட்டி காரன் வந்து
தோளில் துண்டு போட்டு
வசப் பாடி போயிருக்கான்
வச்ச நகைக்கு
வட்டி கட்ட வேணு முன்னு
நோட்டீசு வந்திருக்கு...
படிப்புக்கு பணம் கட்ட
நாளைக்கு தான் கடசி தேதி
அரும மக அழுது போச்சு
பங்காளி கல்யாணம்
பத்திரிகை வந்திருக்கு
கா சவரன் வாங்கணும்
காது கடிச்சா பொஞ்சாதி...
மாத்திர தீந்து போச்சு
சக்கர கூடிப் போச்சு
புலம்பி போனா தாய் கிழவி....
காயும் பயிர கண்டு
கண்ணீரும் வறண்டு போச்சு...
மோட்டார தட்டி பாத்தா
கரண்டும் காணாப் போச்சு...
ஊருக்கு சோறு போடும்
விவசாயி என்வீட்டு அடுப்பில்
ரேஷன் அரிசி வேகுதிங்கு..
ஏர் பிடித்த என் வாழ்வு
பாழாகி போயிடுதே...!
நா பெத்த அரும மகன்
பெரிய படிப்பு படிச்சு
காசு பணம் சம்பாதிச்சு
கடனடைக்கும் கால மட்டும்
காலன் வந்து என கூப்பிடாம
காப்பாத்து சாமி....சாமி!