காடு - கே-எஸ்-கலை
![](https://eluthu.com/images/loading.gif)
சில்லெனத் தொடும்
புலப்படாத சூரிய கரங்கள்
சவரம் செய்யாத
பூமியின் முகத்தைத் தீண்டி
தழுவிக் கொண்டிருக்கும்...
வழியிலா வெளிகளில்
மொழியிலா மொழியென
மிருக, பட்சிகளின்
ஆலாபனை -
இலக்கண தொல்லையற்ற
இலக்கிய ஆட்சி செய்யும்...
அஃறிணை எச்சங்கள் கூட
வாசம் வீசும்....!
இரசாயனப் பண்பாடறியா
ஓரறிவுகள்
மௌனம் பேசும்....
உயிர்பெற்று திரியும்
அமைதியின் ஆத்மா
தென்றலில் கலந்து
விரும்பிய திக்கெல்லாம்
வியாபித்துக் கிடக்கும்...
மூலிகை வாசம்
தெளித்துக் கொண்டு
பச்சைய தேவதைகள்
அட்சதைப் பூக்களைத் தூவி
ஆனந்தக் களிப்புற்றிருக்கும்...
கற்பழிக்கப்படாத
நீரோடைகளின் கால்கள்
பிரபஞ்ச நெஞ்சின் மீது
நீண்டு படர்ந்திருக்கும் ...
வாசிக்கப் படாத
கோடிக் கணக்கான கவிதைகள்
கொட்டிக் கிடக்கும்....
மனித கால்பட்டு
தீட்டாகிப் போகாத
அந்த அடர் காடுகளில்....!