சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம் 16

சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம் 16
16.
கிங்கரர்களே ! உலகில் இந்து மதத்தைத் தவிர இன்னும் பல மதங்கள் இருக்கின்றன. அம்மதத்தினரும் இறைவன் இருப்பதாகவே நம்புகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் கூறியுள்ளது போல பல சடங்குகள் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு பிறப்பிலிருந்து முக்தி கிடைக்காதா ?
முக்தியடைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இப்படியொரு சந்தேகம் வரத்தான் செய்யும். எனவே, உனக்கும் அப்படியொரு சந்தேகம் இருப்பது எனக்கு ஆச்சரியம் தருவதில்லை.
நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்திருத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், ஒருவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். எனவே, இந்து மத வழியில்சென்று தான் முக்தி அடைய முடியும்.
கிங்கரர்களே ! அப்படியென்றால் உலகம் முழுவதும் இந்துமதம் பரவி விடுமா ?
இல்லை .. மானுடா ! நற்காரியங்கள் செய்பவர்கள் எந்த மதத்தினராக இருப்பினும், இந்து மத தர்மங்களை வாழ்க்கையில் பின்பற்றி நடப்பார்களேயானால் அவர்கள் முக்தியடைவார்கள் என்று தானே முதலிலும் சொன்னேன்.
ஆம். ஆம். புரிந்தது.
கிங்கரர்களே ! யுகம் என்றால் என்ன ? யுகத்தின் அளவு எவ்வளவு ?
மானுடா ! யுகங்கள் நான்கு. அவை சத்ய, த்ரேதா, த்வாபர, கலியுகம்.
கலியுகத்தின் அளவு 4,32,000 லக்ஷம் ஆண்டுகள் ஆகும்.
கலியுகத்தின் இருமடங்கு த்வாபர யுகம். அதாவது 8,64,000 லக்ஷம் ஆண்டுகள்.
கலியுகத்தின் மூன்று மடங்கு த்ரேதா யுகம். அதாவது 12,96,000 லக்ஷம் ஆண்டுகள்.
சத்ய யுகம் என்பது கலியுகத்தின் நான்கு மடங்கு ஆகும். அதாவது 17,28,000 லக்ஷம் ஆண்டுகள்.
மகாயுகம் என்பது இந்நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள். அப்படியென்றால் ஒரு மகாயுகத்தின் அளவு எவ்வளவு என்று சொல் பார்க்கலாம்.
கிங்கரர்களே ! எனக்கு கணிதம் தெரியாதென்று நினைக்கிறீர்களா ?
இல்லை .. இல்லை ..
பின் ஏன் இப்படியொரு சோதனை எனக்கு ? ஒருநொடி அவகாசம் தாருங்கள். கணக்கிட்டு சொல்கிறேன். ம்ம்ம் ... ஒரு மகாயுகம் என்பது 43,20,000 லக்ஷம் ஆண்டுகள். சரிதானா ?
சரிதான் !
கிங்கரர்களே ! கல்ப என்றால் என்ன? மன்வந்தரம் என்றால் என்ன ?
கல்ப என்பது பரம்பொருளின் .. அதாவது பிரம்மாவின் ஒரு பகல் அல்லது இரவை குறிப்பிடுவதாகும். இரண்டு கல்பங்கள் பிரம்மாவின் ஒரு நாள் என்று சொல்லப்படுகிறது. ஒரு மகாயுகத்தை ஒரு கல்பம் என்று சொல்லுவதுண்டு.
கிங்கரர்களே ! அப்படியென்றால் ஒரு கல்பத்திற்கு ஸ்ரிஷ்டிகள் செய்து ஒருகல்ப ஆண்டுகள் பிரம்மா உறங்குவாரா ?
இல்லை .. பாம்பொருள் உறங்குவதில்லை. ஒருகல்ப ஆண்டுகள் ஸ்ரிஷ்டிகள் செய்து, ஒருகல்ப ஆண்டுகள் த்யானத்தில் இருப்பார்.
மன்வந்தரம் .... ?
மன்வந்தரம் என்பது 71 மகாயுகங்கள் கொண்டது.
அடே....யப்பா ..
கிங்கரர்களே ! கலியுகம் எப்பொழுது முடிவு பெரும் ?
கலியுகத்தின் முற்பாதி முடிந்துவிட்டது. பிற்பாதி தொடங்கி விட்டது.
அப்படியென்றால் இன்னும் 2,16,000 லக்ஷம் ஆண்டுகள் கழிந்தபின் தான் கலியுகம் முடிவு பெறுமா ?
ஆம். ஆம்.
அதன் பிறகு தான் பிரளயம் தோன்றுமா ?
ஆம். ஆம்.
பிரளயம் வந்தால் எல்லா உலகங்களும் அழிந்து விடுமா ?
இல்லை. இல்லை .. மஹரலோகத்திற்கு கீழிருக்கும் சுவர்க்க லோகம் வரை நீரில் மூழ்கிவிடும்.
அப்படியென்றால் இந்திரன் மற்றும் தேவகன்னிகளும் நீரில் மூழ்க வேண்டியது தானா ? எனக்கு சொர்க்கம் கிடைத்தாலும் மீண்டும் மடிவேனா ?
உனக்கும் மற்றவர்களுக்கும் தப்பிக்க வழி இருக்கிறது .. மானுடா !
அப்படியா ? என்ன வழி ?
தேவகன்னிகையரின் அழகைக் கண்டு மயங்கி காதல் கொள்ளாமல், காலம் எல்லாம் தபம் செய்திரு. மஹரலோகம் சென்றுவிட்டால் தப்பிக்கலாமே !
ஆம் .. கிங்கரர்களே ! உண்மை தான். மாயவலையில் மீண்டும் வீழாதிருக்க மாதவன் தான் அருள் செய்ய வேண்டும் எனக்கு.
கிங்கரர்களே ! எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிய முடியும் ?
ஓம் என்ற பிரணவத்தின் பொருள் அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம்.
"ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமே வாவசிஷ்யதே"
அதன் பொருள் ?
ஓம். அதுவும் முழுமை. இதுவும் முழுமை. முழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது. முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது ... என்பது தான் இதன் பொருள்.
கிங்கரர்களே ! வேதம், வேதாந்தம் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடுகள் உள்ளனவா ?
வேதாந்தம் என்ற சொல்லை பிரித்தால் வேதம் என்றும் அந்தம் என்று பாகுபடும். அதற்கேற்ப, வேதங்கள் இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
ஒன்று கர்ம காண்டம், இன்னொன்று ஞான காண்டம்.
கர்ம காண்டத்தில் சடங்குகள், மந்திரங்கள் முதலானவை உள்ளன. கர்மச் சடங்குகள் செய்வதன் மூலம் முக்தி பெறுவதற்குரிய வழிகள் அவை.
ஞான காண்டத்தில் தத்துவத் தேடல் உள்ளது. வேதத்தின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இந்தத் தத்துவத் தேடல்கள் அமைந்திருக்கின்றன. உலகாயதமான அம்சங்களைத் தாண்டிய சிந்தனைகள், உரையாடல்களை பொதுவாக வேதாந்தம் என்று சொல்லலாம்.
- வளரும் -