கரிசல் மண்ணில் ஒரு காவியம் 21

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 21
அத்தியாயம்-21
ராஜாவின் தாயார் முதலாளி வீட்டு காட்டு வேலைக்கு விடிந்து போனவள் பொழுது அடைந்து வீட்டுக்கு வந்து “அய்யோ” மகன் பசியோடு இருப்பானே என அவசர அவசரமாக சமையல் செய்வதற்கான வேலையை தொடங்குகிறாள்.பகலெல்லாம் பருத்தி மாரைப் பிடுங்கி பழுத்த உள்ளங்கைகளோடு கூலியாகப் பெற்ற கம்மம் புல்லை (நாட்டுக்கம்புத் தானியம்)உரலில் போட்டுக் குத்திதான் சோறாக்க வேண்டும்.அதுவும் இரண்டு முறை உரலில் இட்டு உலக்கையால் குத்தி இடிக்கவேண்டும்.முதலில் தானியத்தைக் குத்தி உமியை நீக்கவேண்டும்.அப்புறம் அதை நீர் விட்டு இடித்து மாவாக்கிச்சேர்க்க வேண்டும்.பின் அதை உலை காய்ச்சி கொதித்தபின் கொட்டி கிண்டிக் கிண்டி சோறாக்க வேண்டும்.சோறாக்கியும் பொறுமையாகக் காத்திருந்து அது திடமாக இறுகும்வரைப் பொறுத்திருந்து அடுப்பைவிட்டு இறக்கி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு கறி அல்லது கொழம்பு தயார்செய்துதான் சாப்பிடவேண்டும்.அந்த உணவைத் தயாரிக்க குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும்.அதுவரை பசியைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

அந்த நாளில் முதலாளி வீட்டுக்கு வேலைக்குப் போனால்தான் தானியம் கூலியாகக் கிடைக்கும்.அதுவும் ஒரு படித் தானியம்.ஒரு படி என்பது ஒன்றரை லிட்டர்.அவ்வளவுதான் கூலி.அதில்தான் அனைத்து செலவு வகைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.நெல்லரிசியை ஏழையாகப் பிறந்தவர்கள் கண்ணாலும் காண முடியாது.சில நேரங்களில் தானியமும் கிடைக்காத தட்டுப்பாடுகள் ஏற்படும்.அப்படிப்பட்ட சூழலில் ஆல்வள்ளிக் கிழங்கை அவித்தோ அல்லது மக்காச்சோள மாவைக் கிண்டியோதான் வயிறை அறையும் குறையுமாக நிரப்பிக்கொள்ளவேண்டும்.அப்படிப்பட்ட பஞ்சகாலம் அது.அந்தக் கஷ்ட காலத்திலும் ஒரு ஏழைத்தாய் தன் பிள்ளையை படிக்கவைத்தாள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை எண்ணிப்பார்க்கும்போதே அவளை கைகூப்பி வணங்கிடத் தோன்றுகிறது அல்லவா?

ஒருபக்கம் அடுப்பில் சோறு கொதித்துக்கொண்டு இருக்கிறது.மறுபக்கம் பிள்ளையின் பசியை எண்ணி தாயின் மனது கொதித்துக்கொண்டு தவிக்கிறது.பசியின் கொடுமையை மறக்க மகனை தன் அருகில் அழைத்து அன்பில் நிறைந்த தாயின் பாசத்தை ஆறுதலாக அள்ளி வழங்கிட ராஜாவை கூப்பிடுகிறாள்.ராஜா இங்க வாயா!இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ!இன்னும் கொஞ்ச நேரத்துல சோறு சாப்புடலாம்.என்னய்யா ரொம்பப் பசிக்குதா?இன்னிக்குக் கொஞ்சம் நேரம் அதிகமாயிரிச்சு.கொஞ்சம் பொறுத்துக்கோ!”எனக்கூறிய அந்த அன்புத்தாயின் ஆறுதல் மொழியிலேயே அவனுடைய பசியெல்லாம் அடங்கிப்போய்விட்டது.

“பகல் பொழுதெல்லாம் உழைத்துக் களைத்து வந்த உன் பசியை எண்ணாமல் என் பசிபற்றி வருந்தும் என் தெய்வமே!உன் பசியாற்றும் பாக்கியம் எனக்கு எப்போது கிட்டுமோ!அப்போதே நான் உன் மகனாவேன்.”என ராஜா தன் மனதுள் எண்ணி கண்களில் நீர் வழியப் பார்க்கிறான்.தாயும் மகனைப் பார்க்கிறாள்.”இன்னும் எத்தனை நாட்கள்தான் இத்தனை கஷ்டங்களோ?அந்த சாமி என்றைக்குத்தான் நம்மளக் கண் தொறந்து பாக்குமோ?’என ஏங்கும் தாயின் ஏக்கத்தை தன் பிள்ளைக்குத் தெரியாமல் பொய்யான புன்னகையால் ஒளித்தாள்.

அப்போது பக்கத்து வீட்டில் பாட்டியின் புளிச்சேப்பம்.சத்தம் பலமாகக் கேட்கிறது.அந்த சத்தம் கேட்ட தாயும் மகனும் ஒருமுறை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு அப்புறம் திடீரென வாய்விட்டு சிரிக்கிறார்கள்.
“பாத்தியாம்மா கெழவிக்குக் கொழுப்ப.அவா சாப்புட்டுட்டாளாம்.அத நமக்கு சத்தம் போட்டுச்சொல்றாளாம்.”எனக்கூறிக்கொண்டே மீண்டும் தன் நிலை மறந்து கலகலவென சிரித்து தன் தாயின் கவலையை மறக்க வைக்கிறான்.தாயும் தன் துன்பம் மறந்து சிரித்துக்கொண்டே கமலாவைப்பற்றி விசாரிக்க முயல்கிறாள்.

“டேய் ராஜா நாங் ஒண்ணு கேள்விப்பட்டேனே நெசமா?”என ஆற்மபிக்கிறாள்.
“என்னம்மா அது “என ஒன்றும் அறியாதவன் போல் தாயைப்பார்கிறான்.அடுத்த வினாவிற்கு.
“எல்லாம் எனக்குத் தெரியுண்டா.இது என்ன தூத்துக்குடி டவுனா!ஒரு வீட்ல நடக்குறது அடுத்த வீட்ல தெரியாமப் போறதுக்கு.!பாவண்டா அந்தப்பொண்ணு.எப்படியோ ஒருவழியா அந்தப் புள்ள படிக்கப்போறதுக்கு அவங்க வீட்ல சம்மதிச்சதே பெரிய காரியந்தாங்.ஆனா இன்னிக்கு நடந்த சமாச்சாரம் ஆச்சிக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு வைய்யி அவ்வளவுதாங் இதச்சாக்க வச்சே ஒரு ஆட்டம் ஆடி பாவம் அந்தப்புள்ளைய படிக்கப் போகவிடாம நிறுத்திப்போடுவா,பொம்பளையாப் பொறக்குறத பெரிய பாவண்டா.அதுக எத்தன இடைஞ்சல்கள சமாளிக்க வேண்டியிருக்கு.என்னைக்குத்தான் இந்த உலகம் பொம்பளைங்கள நிம்மதியா வாழ விடுமோ தெரியல.பொறந்ததுல இருந்து சுடுகாடு போறவரைக்கும் பொம்பளைங்களுக்கு எத்தன தொல்லைக துயரங்க.அதுக படிச்சு முன்னேறனுமனா என்ன பாடு பட வேண்டியிருக்கு!எவ்வளவு கஷ்டங்களத் தாண்ட வேண்டியிருக்கு. பாவண்டா பொண்ணுக.”என கமலாவின் நிலையை எண்ணி வருந்தினாள் அந்தத் தாய்.

தன் தாயும் ஒரு பெண்தானே!அவள் எத்தனை சுமைகளை,சோகங்களை.துன்பங்களை,துயரங்களை,இன்னல்களை,இடையூறுகளைத் தாங்கித் தாண்டித் தனக்காக தன் உயிரை ஏந்தி வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை எண்ணி தன் தாயின் அந்த வறண்டுபோன வாடிய முகத்தைப் பார்க்கிறான் அந்த ஆசை மகன்.சோறு கொதித்துத் தணிகிறது.வெந்து முடிந்த சோற்றை உலை மூடியால் கவிழ்த்தி அடுப்பிலேயே இறுகட்டும் என இருவரும் காத்திருக்கிறார்கள்.
(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (5-Apr-14, 8:42 am)
பார்வை : 262

மேலே