இசையில் கலந்த உயிரே சஹானா இளைய ராஜா

இசையில் கலந்த உயிரே! சஹானா!.....( இளைய ராஜா )

இளைய ராஜா இசையுலகில் ஒரு சகாப்தம் ! இசை என்றாலே அது இளைய ராஜா தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது இசை சாம்ராஜ்யம் பரந்து விரிந்து பலகோடி நெஞ்சங்களை ஆட்கொண்டிருக்கிறது!

இந்து தர்மத்தில் அகில சராசரமே சிவனில் தஞ்சம் ஆனால் சிவனோ ராவணைன் இசைக்கு கட்டு பட்டவராம்! இறைவனையே கட்டுப் படுத்தக் கூடிய வலிமை இசைக்கு உண்டு! சாதரணமாக இறைவனிடம் கேட்டு கிடைக்காத பலவற்றை ஒரு பாடல் பாடிக் கேட்டால் சீக்கிரமே கிடைத்து விடும் அவ்வளவு வலிமை இசைக்கு உண்டு! ராகங்கள் பலவகை அதில் ஒவ்வொன்றும் ஒருவகை! ஒவ்வொரு ராகத்திற்கென்று ஒவ்வரு வரலாறும் குணாதிசியங்களும் உண்டு! அது நம் பாரத நாட்டின் பாரம்பரிய சொத்து!

பண்டைய நாட்களில் மழைக்கென்று ஒரு ராகம் பாடுவார்கள் அதை பாடினால் மழை கொட்டித்தீர்க்குமாம் இப்பொழுதும் பக்தியுடன் பாடினால் மழை பெய்யும்! தீக்கென்று ஒரு ராகம் இப்படி வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களுக்கும் ஒவ்வொரு ராகம்! தாலாட்டு முதல் ஒப்பாரி வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை மனிதனின் வாழ்க்கை இசைக்குள் அடங்கியது தான்!

காக்கா கா கா என்று தான் கத்தும் ஆனால் சும்மா கத்தாது க்காஆஆ க்காஆஆ என்று கமகத்துடன் கத்தும்! காற்று வீசுதலில் கொடி அசைதலில் நீரின் ஓட்டத்தில் பறவையின் குரலில் குழந்தையின் அழுகையில் நாம் விடும் சுவாசத்தில் இப்படி எல்லாமே இசை என்னும் பிரவாகம் பின்னிப் பிணைந்துதான் காணப் படுகிறது! அச் சங்கீத பாஷை தேடலின் எண்ணங்களோடு உள்ள காதுகளுக்கு நிச்சயம் கேட்கும்!

பல்லாயிரக் கணக்கான இசைக் கலைஞர்கள் இவ்வுலகில் வந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் மத்தியில் இசைஞானி இளைய ராஜா தனித்து தெரிய காரணமென்ன? இசையென்பது கற்றால் மட்டும் வந்துவிடாது அதற்கு கொஞ்சம் பிறவிஞானமும் அதிகப் படியான தேடுதலும் வேண்டும்! இசையென்னும் கடலில் யாராலும் நீந்தி கரைசேர முடியாது! இன்னும் கண்டுபிடிக்கப் படாத ராகங்கள் ஆயிரக் கணக்கில் தேங்கி கிடக்கின்றன! இப்படிப் பட்ட சூழ்நிலையில் இளைய ராஜா தன் தேடல்கள் அனைத்தும் இசைக்காவே அர்ப்பணித்துள்ளார்

இசை மீது அவர் கொண்டுள்ள தீராத மோகம்! இது அவரை இன்னும் பலபடி மேலே கொண்டு செல்கிறது! இன்று பல இசைக்கலைஞர்கள் அவர்கள் பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள்! எப்படியெனில் இசைக்கு முக்கியத்துவம் ஒரே ஒரு கீபோடும் ஒரு கம்பியூட்டரும் இருந்தால் போதும் இசைக்கலைஞர்கள் ஆகிவிடுகிறார்கள்! அவர்கள் இசையமைக்கும் திரைப்படங்களில் பாடல்கள் வெளியில் கேட்காது டக்குடு புக்குடு என்று ட்ரம்ஸ் சத்தம் மட்டுமே கேட்கிறது! வார்த்தைகளை உன்னிப்பாக கேட்க வேண்டியுள்ளது!

இசைக்கு ஸ்ருதி என்பது அன்னைக்கு சமமானது! தற்போது பாடல் பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு காட்டுக் கத்தல் போடுகிறார்கள்! அதில் ஸ்ருதி என்ற ஒன்று சுத்தமாக இருக்காது! கேட்கவே பயங்கரமாக இருக்கிறது! ஆனால் இளைய ராஜாவின் இசையில் பாடக் கூடிய பாடகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்! ஒரு இடத்திலாவது எவ்வித இசைக்கருவியும் இன்றி தனி ஆவர்த்தனம் பண்ண விடுவார்! சிந்து பைரவி திரைப்படத்தில் " பாடறியேன் படிப்பறியேன்" நல்ல உதாரணம்!

ராஜா பயன் படுத்தும் சங்கதிகள் ( ஒரு வரிக்கு மறு வரி வித்தியாசமாக பாடுவது சங்கதி ) கமகங்கள் ( பாடலின் அசைவுகள் ) இப்படி ஒவ்வொன்றிலும் அதிக கவனம் கொள்வார்! இசைக்கருவிகள் ஒவ்வொன்றிற்கும் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்! பிதா மகன் திரைப்படத்தில் "இளங்காற்று வீசுதே" பாடலில் பின்னணி இசை அதை சொல்ல வார்த்தை இல்லை அனுபவித்து தான் பார்க்கவேண்டும்!

"ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நெலம் போல
சிலருக்கு தா ன் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே"........ இந்த இடத்தில் என் நெஞ்சை கொள்ளை கொண்டு போகிறார் ராஜா! அந்த இசை இருக்கே அப்பப்பா! ஏதோ ஒன்று தலைக்கு மேலே சுழல்வது போன்ற ஒரு உணர்வு! இந்த வரிகளைக் கேட்டால் வழித்துணை என்ன வாழ்க்கை துணையென்ன தனிமையே அதிகம் யோசிக்கும்! ராஜாவின் இசையை சிலாகிக்க ஒரு நாள் போதாது!அவர் ஒவ்வொரு இடத்திலும் தனித்தே தெரிகிறார்!

இன்று ராஜாவின் "சங்கீதத் திருநாள்" மதுரையில் அவ்விழா இனிதே நடைபெறவும் ராஜா இறைவனின் கருணையில் இன்னும் பலகோடி பாடல்களுக்கு இசையமைக்கவும் நான் இறைவனை வேண்டுகிறேன்! அதில் பங்கு பெறும் அத்தனைக் கலைஞர்களையும் வாழ்த்துகிறேன்!

.............சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (5-Apr-14, 12:06 pm)
பார்வை : 268

மேலே