அனாதை பெண்
என்னைச் சுமந்தவளுக்கு
நான் சுமையானதால்,
துணையாகிப் போனேன்..,
அனாதை எனும் பட்டபெயருக்கு!
மழலையில் நான்
கையேந்தி நின்றாலும்,
கறை படாமலும்,கை படாமலும்
திருடிப் பட்டம் சுமக்காமலும்
வளர்ந்தவள் நான்!
சுவாசமும்,துர்நாற்றமும்
அறிந்தவள் நான்!
தாய் பாசமும்,தந்தை நேசமும்
காணாதவள் நான்!
மார்பு முட்டி
பால் அருந்தாதவள் நான்!
மனம் சற்றும் தளராதவள் நான்..,
மாறு தட்டி சொல்பவள் நான்!
இரவென்றும் பகலென்றும்
இரண்டொன்று!-அதில்
இரவலாகி போகாமல்
என் மானம் காக்கும்
நம்பிக்கையுண்டு!
பசியென்று வந்த பின்னும்
உணவென்று ஏந்தி நிற்கா-என்
உழைப்புண்டு அதிலே
நியாயம் உண்டு!
பிச்சை பாத்திரம் ஏந்த மாட்டேன்
கடவுளை குற்றம் சொல்லியும்
திரிய மாட்டேன்!
படைத்தவன் அவனே
எனக்கென்ன என நினைக்க
எனை பெற்றவளையும்
குறை கூற மாட்டேன்!
இச்சை தனித்தோ
இன்பம் கொடுத்தோ
பணம் காண மாட்டேன்!
அதிலே பவுசு கொண்டாட மாட்டேன்!
எச்சில் வடிக்கின்ற
காமக் கூட்டத்தில்
எதிர்த்து பிழைக்கும்
சூசகமும் நான் அறிவேன்!
தவறி போன என்னை
போன்றவளுக்கு
தட்டிக் கொடுத்து
பாடமும் ஆவேன்!
பாதையும் காணுவேன்!
தரம் பிரித்தும்,இனம் பிரித்தும்
அழகு பார்க்கும்
ஈனச் சமுதாயத்திற்கு
வரம் பிடித்து வாழுவேன்!
சமூகம் தந்த பாடம் இருக்க
எதையும் சந்திக்கும் துணிவு இருக்க
சாதனை படிப்பேன்..,
அனாதை இல்லா இந்தியா என்று!