கயிறைத்தேடி அலையுறேனே
வயலெல்லாம் வெடித்திருக்க
விளஞ்ச நெல்லு வாடிநிக்க
வான்மழையும் கைவிரிக்க
வழியேதும் தெரியாமல்
ஈரமில்லா மாந்தரோடு
காய்ந்து உயிர் வாழுறேனே.
வறுமை உயர்ந்திருக்கும்
பஞ்சக் கொடுமையிலும்
பெற்றெடுத்த பிள்ளைபோல
விட்டுவிட முடியாமல்-பயிரைக்
காப்பாற்றி கரையேற்ற
கண்கலங்கி நிற்கிறேனே.
காலத்தின் ஓட்டத்தால்
காக்கும் அன்னை காவிரி
காணாமல் போனதால்
பொட்டிழந்த மங்கைபோல
பொலிவிழந்த நஞ்சையால்
வாழ்விழந்து வாடுறேனே.
வாழவைக்கும் பூமிதனை
வாழாவெட்டியாகாமல் காப்பதற்கு
வட்டிக்கு பணம் வாங்கி
வஞ்சமில்லா உழைப்பு தந்தும்
உயிரை விட்ட பயிரால
கயிறைத்தேடி அலயுறேனே.