நான் காத்திருக்கின்றேன்
நீ எனக்கு வேண்டும்
நீயாக நீ எனக்கு வேண்டும்
நிறமாக வேண்டும்
நிறையாக வேண்டும்
பிரியாத உயிராக வேண்டும்
இதமான தணலாக வேண்டும்
உன்
விரல் தீண்டல்
எனக்கு வேண்டும்
உன்
குரல் தேடல்
எனக்கு வேண்டும்
அழகாக
நீ என்னை
அழைக்கும் தருணம் அனைத்தும்
அப்படியே எனக்கு கண்டிப்பாக வேண்டும்
நான்
பார்த்துகொண்டிருக்கும் தூரத்தில்
நீ சிரித்துக்கொண்டிருக்க வேண்டும்
நான்
பேசிக்கொண்டிருப்பதை எல்லாம்
காது கொடுத்து நீ
கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்
தவறேதும்
நான் செய்தால்
அதட்டிடவே நீ வேண்டும்
தறிகெட்டு
நான் போனால்
நிலைதூக்கி நிறுத்திடவே
நீ எனக்கு அருகினில் வேண்டும்
பொய்யான
இவ்வுலகினில்
மெய்யான ஒரு உறவாய்
எந்நாளும்
எனக்கு நீ
பெருங்காட்சி அளிப்பாயே
அந்த
அமுதான
கணங்கள்தான்
அயராத நினைவுகளின்
இடம் பெயராத தூண்களாகி
என் உயிர் கோபுரம்
தாங்கி நிற்கும்
பெருங்காரணி.. என் அம்மா..!!
எனக்கு நீ வேண்டும்..
நிழல் படமும்
உன் நிற பிம்பமும்
என்னை பார்க்கின்றன..!!
நான்
அழுது புரண்டு
சிறு குழந்தையாய்
அடம் பிடித்து கேட்கின்றேன்
என்றென்றும் எனக்கு நீ வேண்டும்..!!
அந்த
இதமான
வெண்ணிலவை
இன்னும் பலமுறை
எனக்கு நீ காட்டி
அன்பென்னும் அமுதம்
ஊட்டிவிட
தாயே நீ
எனக்கு வேண்டும் மீண்டும்..!!
இப்புவிமீது
வாழ்ந்த என் தெய்வமே
எனக்கு வரம் தருவாய் நீயே..!!
நான் காத்திருக்கின்றேன்..
தினம்
கனவினில் நீ வந்து
என் வேண்டுதல் நிறைவேற்றிடுவாய்..!!

