மலர துடிக்கும் பூக்கள் - பகுதி 1
சமூக நிலை... இந்த சமூக நிலைதான் ஒவ்வொரு மனிதனுடைய கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் விதவிதமான கனவுகள் உண்டு. அந்த கனவை நிறைவேற்ற இந்த சமூகத்தில் எத்தனை எத்தனை போராட்டங்களை சுமக்கவேண்டுமென்று அந்த கனவை நினைவாக்க முயன்றவர்களுக்கு மட்டுமே புலப்படும் அதில் உள்ள வலிகளும், வேதனைகளும் எவ்வளவு கொடுமையானதென்று. அப்படியொரு கனவினை கண்டு அந்த கனவை நினைவாக்க முயன்றவர்கள் வரிசையில் இப்பொழுது நானும் என் தோழர்கள் ஜாய் ரெட், கணேஷ், கோபி, ஆனந்த் இந்த ஐவரும் கண்ணீருடன் பகிர்ந்து கொள்ளும் கதை இது.
படிப்பதற்கு பணம் ஒரு முட்டுக்கட்டை அல்ல என்பது உண்மைதான் ஆனால் பணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தவர்களை மட்டுமல்ல தேர்வில் படுதோல்வி அடைந்தவர்களையும் கூட இவன் எந்த துறையில் சேர்ந்து படிப்பதற்கு தகுதி உடையவன் என்று அந்த பணம்தான் முடிவு செய்கிறது. இந்த நிலை இந்தியாவில் எழுதப்படாத சட்டம். “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றொரு பழமொழி உண்டு. படிப்பதற்காக துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் பிச்சை எடுத்தாவது கல்வி கற்க முயல்கின்றான் ஆனால் அந்த பிச்சை கொடுப்பதற்குதான் எவருக்கும் மனமில்லை. இந்த சமூதாயத்தில் பணம் இல்லாமல் படிப்பதென்பது சாத்தியமல்ல. அதற்க்கு உதாரணம் நானும் என் தோழர்களும்.
கல்லூரி வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்க்கப்பட வேண்டிய ஒரு அழகிய பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை அனுபவிக்க எங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு அழகிய பூஞ்சோலைதான் எங்கள் பல்தொழில்நுட்ப கல்லூரி. இந்த கல்லூரியில் சேர்வதற்காக நாங்கள் எத்தனை எத்தனை வலிகளை சுமந்தோமென்று எங்களுக்குதான் தெரியும். எந்த ஒரு சிறந்த மாணவனும் தான் கற்கும் கல்வியின் நிலையை மென்மேலும் உயர்த்திக்கொண்டு செல்ல கனவு காண்பது வழக்கம் அதை போன்றுதான் நாங்களும் அழகிய கனவு ஒன்றை கண்டோம்.
பொறியியல் துறையில் பட்டம் பெற வேண்டுமென்ற ஒரே எண்ணம் எங்களின் உள்ளே வியாவித்து நின்றது. அந்த கனவை நினைவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். அதன் விளைவாக கல்லூரி தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடம் எங்களுக்கு கிடைத்தது. அந்த மகிழ்ச்சியோடு நாங்கள் ஐவரும் பொறியியல் பட்ட படிப்பிற்கு விண்ணபித்தோம். பொறியியல் துறையில் சேர்வதற்கான தகுதி மறுமொழி கடிதமும் கிடைத்துவிட்டது ஆனால் விதி யாரை விட்டுவைத்தது! கடமை, சமூகம் என்ற பெயரில் எங்களது கனவுகளை சுக்கு நூறாக உடைத்து எங்களது வாழ்கையை புரட்டி போட்டது.
சகோதரியின் திருமண தேவைகள், சகோதரனின் படிப்பிற்கு தேவையான தேவைகள், கடன் காரனின் அவமதிப்பு, வங்கி காரனின் கடும் வெறுப்பு இப்படி பலவிதமான கடமைகளும், மன வேதனைகளும் எங்களது கழுத்தை நெரிக்க எங்கே செல்வதென்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை தேடி பரதேசியாக ஓடினோம்.
தான் பெற்றெடுத்த பிள்ளை தனக்கு இல்லை என்ற நிலையில் ஒரு தாய் எவ்விதமான துயரங்களை அனுபவிப்பாள்? அதைபோன்றுதான் எங்களது கனவு எங்களது கைகளில் நினைவாக இருந்தும் அதை முழுமையாக பெற முடியாமல் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
நாளடைவில் இதுதான் வாழ்க்கை என்றொரு மனநிலைக்கு நாங்கள் அனைவரும் வந்துவிட்டாலும் கூட எங்களது கனவு மட்டும் ஒரு சில காரணங்களால் இன்றும் கனவாகவே உள்ளதென்று நினைக்கும் பொழுது இந்த சமூகத்தில் ஒரு சிலரை கொலை செய்யும் அளவிற்கு தீர ஆவேசம் உண்டாகின்றது.
இந்திய நாடு வல்லரசாக வேண்டுமென்று ஒருவன் கனவு கண்டால் மட்டும் போதுமா? இந்தியாவில் உள்ள ஒவ்வொருவனும் அந்த உணர்வோடு செயல்பட வேண்டும். இந்த தேசம் வல்லரசாக வேண்டுமென்றால் தலை சிறந்த மாணவர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக வேண்டும் என்று நினைப்பவன் ஏழை, எளியவன் மட்டுமே.
நாட்டில் உள்ள செல்வந்தர்கலெல்லாம் எங்கே சென்றார்கள்? சுயநலம்... சுயநலம்... சுயநலம்... சிறந்த மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதில் கூட சுயநலம். கல்வி தரும் குருமார்களுக்கு தட்சணை தருவதில் தவறில்லை. கல்வியின் மகத்துவம் அறியாத முண்டங்களுக்கும், மூடர்களுக்கும் நாங்கள் எதற்காக தரவேண்டும் தட்சணை? அந்த முண்டங்களும், மூடர்களும் யாரென்று குறிப்பிட வான் எல்லை கொண்ட காகிதம் போதாது.
வீட்டுக்கு வீடு பல இலவச பொருட்களை கொடுத்து வாக்கு சேகரித்தவர்கள் இலவச கல்வி கொடுப்பதாக கூறி வாக்கு சேகரித்திருந்தால் ஒட்டு மொத்த மாணவ சமூதாயமும் காலம்முழுவதும் நன்றி கடன்பட்டுருக்கும். அப்படி செய்வதற்குதான் இந்த தேசத்தில் எவருக்கும் மதியில்லை. மதிகெட்ட மனிதர்களை வைத்துகொண்டு இந்தியாவை பற்றி கனவு காண்பது சாத்தியமா?
இப்படி இருக்கும் இந்த தேசத்தில் எங்களை போன்றவர்களது நிலை? சிறந்த மாணவர்கள் முன்னேறி வருவதற்கான வாய்ப்புகள் எந்த அளவிற்கு இந்த தேசத்தில் குறைவோ அந்த அளவிற்கு இந்த இந்திய தேசம் வல்லரசாவதர்க்கும் வாய்ப்புகள் குறைவே.
இந்திய தேசம் வல்லரசாக வேண்டுமென்றால் ஏழை, எளிய சிறந்த மாணவர்களுக்கு குறை இல்லாத கல்வியை தாருங்கள்! அதன் பிறகு கனவுகளை காணுங்கள்!! இந்திய தேசம் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வரும் பாருங்கள்!!!