கலங்கரைவிளக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
திசை தெரியா
நள்ளிரவு ஆழிப்பேரலையில்
உன் சமிக்ஞைகளின்
ஓளி சிந்துதலையுணர்ந்து
என் பாய்மரக்கலன்
செலுத்துகிறேன் நான் !
நீயோ
உந்தன் கண்ணாமூச்சியாட்டத்தின்
திசை திருப்புதல்களால்
ஒரு
சிறு தோணிக்காரனின்
வன் துடுப்பில் வலைவீசி
சாமக் கடலின் சதிராடல்களில்
என் தேடுதல் வேட்டைகளின்
மீது
தாயக்கட்டை உருட்டி
நமக்கான கட்டங்களுக்குள்
மேலும் கீழுமாய்
என்னை அலைக்களிக்கிறாய் !
நான்
மீன் பிடிக்க
தோணி செலுத்துகையில்
என்
சமுத்திர சந்தோசங்களென
நீயே
எனதடிவானம் வரை
மணல் நீர் பரல்களென
தொலை பறந்து -
பால் நிலா , விண்மீன்
அலைகளின் ராப்பயணம்
கடல்பறவைகளின் உப்புக்குரல்
என நெய்தலின் புறவெளியாகி
விரிந்து கிடப்பதாய்
பேருவகை கொண்டு -
கருநீர் பிளந்து
நின் தயை நோக்கி
என்னைப் படையலிட்டு
பெருந் துடுப்பசைக்கிறேன் !
தொலை தூர வெளிச்சப்புள்ளியென
உன் கண்சிமிட்டலை
இலக்கென தந்தென்னைக்
கரைசேர் ...
குனிந்தவனுக்குக் கனிவது
கொடை மரபு !
நான் கரைசேரும் வழி
நீ சிந்தும் ஓளி -
இதன்றி வேறொன்றில்லை .