எதனாலே

பட்டாம் பூச்சி சிறகு அசைத்து
பறந்து வருவது எதனாலே ...?
தோட்டத்துச் செடியில் பூக்கள் விரிய
தேனை உறிஞ்சிட அதனாலே ....!!!

பச்சைக் கிளியின் வளைந்த அலகு
சிவந்து போனது எதனாலே ...?
புளித்த மாங்காய் கொறித்த வாயும்
கூச்சத்தில் சிவந்தது அதனாலே ....!!!

பரந்து விரிந்த நீலவான் வெளியும்
பால்போல் வெளுத்தது எதனாலே ....?
மஞ்சு கூட்டம் வெண்திரை போட்டு
நீலத்தை மறைத்தது அதனாலே ...!!!

கார்முகில் காண கலாபம் விரித்து
மயில்கள் ஆடுவ தெதனாலே ...?
மேகம் கருக்க வருமே மழையென
மகிழ்ச்சியில் ஆடுது அதனாலே .....!!!

தலைக்கு மேலே கொம்பில் கிளைகள்
மான்கள் கொண்டது எதனாலே ....?
எதிரிகள் விரட்டித் துரத்தும் போது
தற்காத்துக் கொள்ள அதனாலே ....!!!

உச்சியில் அழகிய சிவப்புக் கொண்டை
சேவல் போட்டது எதனாலே ....?
பெட்டைக் கோழியை கவர்ந்து இழுக்க
இறைவன் கொடுத்தது அதனாலே ....!!!

இலையின் நுனியில் பனித்துளி உருண்டு
முத்தாய் நிற்பது எதனாலே ....?
ஆதவன் அணைப்பில் தன்னை மறந்து
கதிருள் கலந்திட அதனாலே .....!!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Apr-14, 8:45 pm)
பார்வை : 158

மேலே