கட்டுரை இயற்கையொடும் இணைந்த வாழ்வு நற்றிணைச் செய்தி----01
திணை: குறிஞ்சி ; இயற்றியவர்: கோவூர் கிழார்.
நீண்டு உயர்ந்து வளர்ந்த மூங்கிலினால் உண்டாகிய, படர்ந்து காணப்படும் நிழலைக் கொண்ட மலையில், முதிர்ந்த நிலையிலுள்ள கர்ப்பத்தின்(சூல்) காரணமாகக் கன்றினை ஈன்று அதன் காரணமாக வருந்தி நிற்கின்ற பெண்யானையையும், அண்மையில் பிறந்து பாலினை வயிறாரக் குடிக்கும் அக்குட்டியினையும் விட்டு அகன்று, ஆண்யானை
மகிழ்ச்சியுடன் அப்பெண் யானையின் பசியினைப் போக்குவதற்காக, வளர்ந்து வளைந்து நிற்கும் முற்றிய தினைக்கதிகளைப் பிடுங்கிக் கொண்டுவரும்.
அவ்வாறு கொண்டுவரும்பொழுது தினைக்காட்டினைக் காவல் காக்கும் வேடுவன் எறிந்து, விரைந்து செல்லுகின்ற எரிகின்ற தீப்பந்தமானது, மூங்கில் காட்டினூடாகத், தன் நிலையிலிருந்து பெயர்ந்து நகரும் விண்மீனைப் போலத் தோன்றும்.
இனிப் பாடல் வரிகளைப் பார்ப்போம்:
நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின்
கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப்
பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து
வாலா வேழம் வணர்குரல் கவர்தலின்
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி
வேய்பயில் அடுக்கஞ் சுடர மின்னி
நிலைகிளர் மின்னில் தோன்றும்
அரும்பத உரை:
நிவந்த=படர்ந்த; சிலம்பின்= மலையின்; உயங்க =வருந்த;
பசும்புனிறு= இளைய, அப்பொழுது பிறந்த பிஞ்ச்ஜ்சுத்தன்மைகொண்ட (யானையின்) கன்று; தீரிய – அகன்ற ; களிசிறந்து= மகிழ்ச்சி மிகுதியான;
வாலா வேழம்= பெருமையுடைய ஆண்யானை; வணர்- வளைந்த; குரல்=தினை; ஞெகிழி= னெருப்புக் கொள்ளி(தீப்பந்தம்); வேய்பயில் அடுக்கம்= மூங்கில்கள் அடுக்கடுக்காக நிறைந்து காணப்படும் காடு;
நிலைகிளர் மின்னில் = தன் நிலையிலிருந்து வீழும் விண்மீன்;
=====
இயற்கையை இரசிக்கப் புறப்படுவோம்....